Published : 26 Apr 2018 08:46 AM
Last Updated : 26 Apr 2018 08:46 AM

உலக மசாலா: அன்புக்கு மரணமில்லை!

ங்கிலாந்தில் வசிக்கும் கிறிஸ் தனது 41-வது பிறந்தநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அன்று பொக்கிஷப் பெட்டியிலிருந்து ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை எடுத்துப் பிரித்தார். ‘என் அன்பு கிறிஸ், உனக்கு இன்று 41-வது பிறந்தநாள். இருந்த கொஞ்சம் முடியும் கொட்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் நீ மிகவும் வசீகரமாக இருப்பாய். எப்போதும்போல் நானும் என்னுடைய அன்பும் உன் கூடவே இருப்போம். ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துகள். அன்புடன் உன்னுடைய கேட்’ என்று அழகான கையெழுத்துகளில் இருந்த வாழ்த்தைப் படித்து, கண்ணீர் வடித்தார் கிறிஸ்.

”2001-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தோம். முதல்முறை பார்த்தபோதே என் மனதுக்கு நெருக்கமாகிவிட்டார். அவர் மருத்துவப் படிப்பை முடித்தவுடன் 2005-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். முதல் 5 ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் கழிந்தது. நாங்கள் சுற்றுலாவுக்குச் சென்றபோது திடீரென்று உடல் நலக் குறைவு. சாதாரணப் பிரச்சினை என்றுதான் நினைத்தோம். ஆனால் புற்றுநோய் என்று தெரிந்தபோது பயந்துவிட்டோம். விரைவிலேயே மனதைத் தேற்றிக்கொண்டு சிகிச்சையில் இறங்கினோம். 3 வருடக் கடினமான சிகிச்சையில் கேட் முற்றிலும் மாறிப் போனார். ஒருகட்டத்தில் குணப்படுத்த முடியாது என்று தெரியவந்தது. இனி மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், இயற்கையாக மரணத்தை சந்திக்கப் போவதாக கேட் சொன்னதை, நானும் ஏற்றுக்கொண்டேன். உற்சாகமாக மருத்துவப் பணிக்குத் திரும்பினார்.

முதிய நோயாளிகளை வழக்கம்போல் அன்பாகக் கவனித்துக்கொண்டார். தன்னைப் போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவும் விதத்தில் ‘ஹலோ மை நேம் இஸ்…..’ என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து, நன்கொடை திரட்டினார். இது பெரிய அளவில் பிரபலமானது. நன்கொடையும் குவிந்தது. புற்றுநோய் மருத்துவமனையின் அறக்கட்டளைக்குச் சென்றது. ராயல் கல்லூரியின் மருத்துவர்களுக்கான விருது, இளவரசர் சார்லஸ் கையால் கேட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் இளம் மருத்துவர் இவர்தான். பிறகு 2 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். நேரம் கிடைக்கும்போது நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். ஒரு பக்கம் கேட் மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அவரது உடல் மிகவும் மோசமடைந்தது. ஒருநாள் இரவு நான் கேக் சாப்பிடலாமா என்று கேட்டார். சாப்பிடாவிட்டாலும் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று சொன்னவுடன் சிரித்துவிட்டார்.

அன்று இரவு முழுவதும் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். சில நாட்களில் என் கையைப் பிடித்தபடி அவரது உயிர் அமைதியாகப் பிரிந்தது. என் மனைவியை இழந்து மிகவும் துயரப்பட்டேன். ஒரு வாரம் கழித்து அவருடைய படுக்கைக்கு அருகில் இருந்த பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. ‘உன்னுடைய 65-வது பிறந்தநாள் வரைக்குமான வாழ்த்து அட்டைகள் இங்கே இருக்கின்றன. கண்டிப்பாக அந்தந்த பிறந்தநாள் அன்றுதான் பிரித்துப் படிக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தார். 2 ஆண்டுகளாக என் பிறந்தநாளை இதுதான் சுவாரசியப்படுத்துகிறது. இன்று அவர் இல்லாவிட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்த பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!” என்கிறார் கிறிஸ்.

அன்புக்கு மரணமில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x