Published : 24 Apr 2018 09:42 AM
Last Updated : 24 Apr 2018 09:42 AM

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்காவிட்டால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு ரூ.30 கோடி நிதி வழங்குவேன்: நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் உறுதி

‘‘பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு நிதி ஒதுக்காவிட்டால், நான் ரூ.30 கோடியை வழங்குவேன்’’ என்று நியூயார்க் முன்னாள் மேயரும் கோடீஸ்வரருமான மைக்கேல் புளூம்பெர்க் கூறியுள்ளார்.

பூமி வெப்பமயமாதலைத் தடுக்க பாரிஸில் 2015-ம் ஆண்டு மாநாடு நடந்தது. அப்போது சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகள்தான் அதிகபட்சமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன என்று புகார் எழுந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பூமி வெப்பமயமாதலைத் தடுக்க, 2 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறைப்பது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ளவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மற்றும் 187 நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்குப் பாதகமானது. எனவே, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், நியூயார்க் முன்னாள் மேயரும் பெரும் கோடீஸ்வரருமான மைக்கேல் புளூம்பெர்க் நேற்றுமுன்தினம் கூறியதாவது:

அமெரிக்க அரசு நிதி வழங்காவிட்டால், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு எனது அறக்கட்டளை சார்பில் 4.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.30 கோடி) வழங்குவேன். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விஷயத்தில் எனக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, நிதியுதவிக்கான காசோலையை அனுப்பி வைப்பேன். பருவநிலை ஒப்பந்த விஷயத்தில் அடுத்த ஆண்டாவது அதிபர் ட்ரம்ப் தனது நிலையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு மைக்கேல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x