Published : 22 Apr 2018 09:14 AM
Last Updated : 22 Apr 2018 09:14 AM

உலக மசாலா: அன்புக்குப் பூனையும் அடிமை

தெ

ன் கரோலினாவின் ஒரு வீட்டில் வசித்த டாபி என்ற பூனையை, அதன் உரிமையாளர் இன்னொருவருக்கு வழங்கிவிட்டார். 12 மைல் தொலைவில் இருந்தது அந்த புதிய வீடு. டாபிக்கு ஏற்கெனவே வளர்த்தவர்களை விட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லை. யாரும் கவனிக்காத நேரம் பார்த்து, வீட்டை விட்டு வெளியேறியது. 12 மைல்கள் நடந்து பழைய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. டாபியைக் கண்டவுடன் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாத டாபியை, தாங்கள் கொடுத்து விட்டோமே என்று குற்றவுணர்வு அடைந்தனர். இனி டாபியை யாருக்கும் கொடுக்க இயலாது என்று கூறிவிட்டனர்.

அன்புக்குப் பூனையும் அடிமை!

ப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றியவர் மிஸுகி நான்கனோ. எட்டு ஆண்டுகளாகப் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். சமீபத்தில் ஜப்பானியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார். காற்றிலிருந்து தனக்குத் தேவையான புரோட்டீனைப் பெற்றுக்கொள்வதாகவும் இப்போது தான் ஒரு சூப்பர் மனிதராக வலம் வருவதாகவும் கூறியிருக்கிறார். “2009-ம் ஆண்டு திடீரென்று பழ உணவுக்கு மாறிவிட முடிவு செய்தேன். ஆனால் நம் உடலுக்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற சத்துகள் தேவை. சமச்சீர் உணவில்தான் இவை கிடைக்கும். பழ உணவில் சமச்சீர் சத்துகள் கிடைக்காது. இதனால் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படலாம். பழ உணவைப் பற்றி நிறைய படித்தேன். ஆராய்ச்சி செய்தேன். அதன் மூலம் நீண்ட காலப் பழ உணவுப் பழக்கத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் என்னையே கினியா பன்றியாக நினைத்துக் கொண்டு, இந்தப் பரிசோதனையில் இறங்கினேன்.

ஒரே நாளில் பழ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பழங்களைச் சாப்பிட்டு, உடலையும் மனதையும் தயார் செய்தேன். ஒருகட்டத்தில் தண்ணீர் கூடப் பருகாமல் முழுக்க பழ உணவுப் பழக்கத்துக்கு வந்துவிட்டேன். என் பரிசோதனைகளையும் முடிவுகளையும் வலைதளத்தில் எழுதிவந்தேன். 2015-ம் ஆண்டு தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தேன். பல விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. நான் பழங்களைத் தவிர விட்டமின் பி12, புரோட்டீன் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் யாரும் நம்பவில்லை. மனித உடலுக்கு புரோட்டீன் அவசியம், அதை நான் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறேன்.

நான் பழ உணவுப் பழக்கத்தில் இருப்பதால், என்னுள் ஸ்பெஷல் வகை பாக்டீரியா வளர்ந்து வருகிறது. அதுதான் காற்றிலிருந்து புரோட்டீனை எடுத்துக்கொள்கிறது. தற்போது நான் சத்துக் குறைபாட்டால் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதைப் பொய் என்று நிரூபிக்கவே மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பழ உணவை மட்டும் சாப்பிடும் சூப்பர் மனிதன் என்பதை உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும்” என்கிறார் மிஸுகி நான்கனோ. இவரது உணவுப் பழக்கத்தை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

சூப்பர் மனிதரா என்பதைக் காலம்தான் நிரூபிக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x