Published : 20 Apr 2018 08:34 AM
Last Updated : 20 Apr 2018 08:34 AM

வானத்தை முழுவதுமாக ‘ஸ்கேன்’ செய்துவிட ‘டெஸ்’ செயற்கைக்கோளை ஏவியது நாசா

சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது.

பூமியைத் தவிர வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வரு கிறது. தண்ணீர் இருக்கும் கிரகத்தை கண்டறிய நாசா தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 337 மில்லியன் டாலர் செலவில் ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ எனப்படும் செயற்கைக்கோளை நாசா நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை மாலை டெஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனத்தின் ‘பால்கன்’ ரக ராக்கெட் மூலம் டெஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இது வாஷிங் மெஷினை விட சற்று சிறிய வடிவிலானது. டெஸ் செயற்கைக்கோள் 5 அடி உயரம், 4 அடி அகலம், 362 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள பாதையில் 2 ஆண்டுகள் சுற்றிவந்து புதிய கிரகங்களை ‘ஸ்கேன்’ செய்யும்.

குறிப்பாக சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள சிறுசிறு கிரகங்கள், அதிக ஒளியுள்ள ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும். பாறைகள் நிறைந்த, பனி படர்ந்த, பல்வேறு வாயுக்கள் உள்ள எல்லா கிரகங்களையும் டெஸ் செயற்கைக்கோள் ஸ்கேன் செய்யும். டெஸ் செயற்கைக்கோள் வானத்தில் பெரும்பாலான பகுதியை, 2 ஆண்டுகளில் ஸ்கேன் செய்யும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசாவின் அறிவியல் பிரிவு நிர்வாகி மூத்த விஞ்ஞானி தாமஸ் ஸர்புச்சென் கூறும்போது, ‘‘இரவில் மின்னும் பல நட்சத்திரங்களை கிரகங்கள் சுற்றிவருவதை அறிவோம். அவற்றை டெஸ் ஆய்வு செய்யும் போது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் பல கேள்வி களுக்கு விடைகள் கிடைக்கும். அப்போது இந்த வானம் இன்னும் அழகாக மாறும். ஆனால், இந்த டெஸ் செயற்கைக்கோள் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆய்வு செய்யாது. அதற்காக டெஸ் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் கிரகங்களில் தண்ணீர் இருக்கிறதா உயிர்கள் வாழக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது உட்பட எல்லா வகையிலும் ஆய்வு செய்யும்’’ என்றார்.

டெஸ் செயற்கைக்கோளில் 4 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வானில் எல்லாத் திசைகளையும் படம் பிடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த டெஸ் திட்டத் தலைமை விஞ்ஞானி ஜார்ஜ் ரிக்கர் கூறும்போது, ‘‘கிரகங்களை எங்கு பார்க்க வேண்டும், எப்போது பார்க்க வேண்டும் என்பதை டெஸ் நமக்கு சொல்லும்’’ என்றார்.

ஏற்கெனவே வேற்று கிரகங்களை ஆய்வு செய்ய ‘கெப்ளர்’ தொலைநோக்கியை நாசா விண்ணில் செலுத்தியது. அது ஆயிரக்கணக்கான கிரகங்களை கண்டுபிடித்து கடந்த 9 ஆண்டுகளாக தகவல் அனுப்பியது. அது விரைவில் செயலிழக்க உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது டெஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.- ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x