Published : 18 Apr 2018 08:27 AM
Last Updated : 18 Apr 2018 08:27 AM

உலக மசாலா: நாரையின் மிக அழகான காதல் கதை!

தெ

ன்னாப்பிரிக்காவிலிருந்து மிகப் பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின் ஒரு சிறிய கிராமத்துக்கு ஆண்டுதோறும் வலசை செல்கின்றன. கடந்த 16 ஆண்டுகளாக ஓர் ஆண் நாரை, 14 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து, பறக்க இயலாத தன் இணையைச் சந்தித்துக் கொண்டிருக்கிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் குரேஷியாவுக்கு வந்து பெண் நாரையுடன் குடும்பம் நடத்தி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்காவுக்குப் பறந்து செல்கிறது. அடுத்த மார்ச் மாதம்வரை தன் இணைக்காகப் பெண் நாரை காத்துக்கொண்டிருக்கிறது!

“1993-ம் ஆண்டு வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டு இந்தப் பெண் நாரையின் காலில் துளைத்து மயங்கிக் கிடந்தது. காட்டில் பிற விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று எல்லோரும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பறவையை அப்படியே விட்டுவிட மனம் இல்லை. மருத்துவம் செய்தேன். ஆனாலும் பறக்கும் ஆற்றலை இழந்துவிட்டது. மெலினா என்று பெயரிட்டு, என் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.

தினமும் 30 கி.மீ. தூரத்திலிருக்கும் குளத்துக்குச் சென்று, மீன்களைப் பிடித்து வந்து உணவு கொடுக்கிறேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த க்லெபேடனுடன் இணை சேர்ந்தது. இரண்டும் குடும்பம் நடத்தி அந்த ஆண்டு சில குஞ்சுகளை உருவாக்கின. குஞ்சுகள் நன்றாகப் பறக்கக் கற்றுக்கொண்டவுடன், க்லெபேடன் தன் குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மெலினாவைத் தேடி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் வந்து சேர்ந்தது. மெலினாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த 14 ஆண்டுகளில் இரண்டும் சேர்ந்து 62 குஞ்சுகளை உருவாக்கியிருக்கின்றன. ஒவ்வொரு வருஷமும் இணையும் குஞ்சுகளும் பறந்து செல்லும்போது மெலினா துயரத்தில் ஆழ்ந்துவிடும். உயரமான மரத்திலோ கட்டிடத்திலோ 3 நாட்கள்வரை உண்ணாமல், உறங்காமல் அப்படியே அமர்ந்திருக்கும். அப்போது என்னைக் கூடப் பொருட் படுத்தாது. துயரம் குறைந்தவுடன் இறங்கி வந்து, இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளும். அடுத்த மார்ச் மாதத்துக்காகக் காத்திருக்கும்.

மெலினாவுக்கு மட்டுமின்றி, அதன் குஞ்சுகளுக்கும் சேர்த்து நான் மீன்களைக் கொண்டு வந்து கொடுப்பேன். க்லெப்பேடனால் தன் குடும்பத்துக்கே உணவு கொண்டு வர இயலாது என்பதால் நான் உணவூட்டுவதை இந்த ஜோடி அனுமதிக்கிறது. நான் பள்ளி யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். என் மகன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான். மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். நானும் என் மகள் மெலினாவும் மட்டுமே இங்கே வசிக்கிறோம். க்லெப்பேடனின் காலில் ஆராய்ச்சியாளர்கள் அடையாளத்துக்கு வளையம் கட்டி வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் கேப் டவுனில் அது வசிப்பது தெரிய வந்திருக்கிறது. என்னால் மெலினாவைத் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச்செல்ல இயலாது. ஒரு மாதம் பயணித்து, சரியாக மார்ச் 24-ம் தேதி தன் இணையைக் காண வரும் க்லெப்பேடனின் அன்பை என்னவென்று சொல்வது?” என்கிறார் 71 வயது ஸ்டெஜ்பன் வோகிக்.

நாரையின் மிக அழகான காதல் கதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x