Published : 13 Apr 2018 08:27 AM
Last Updated : 13 Apr 2018 08:27 AM

உலக மசாலா: சாது மிரண்டால் நாடு தாங்காது!

க்கூன்கள் என்பவை பாண்டா கரடிகளுக்கு நெருங்கிய இனமாகும். இவை வடஅமெரிக்காவில் காணப்படுகின்றன. அண்மைகாலமாக அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் ரக்கூன்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. பொதுவாக ரக்கூன்கள் இரவு நேரத்தில்தான் உணவு தேடி வெளியே வரும். மனிதர்களைக் கண்டால் ஒதுங்கிவிடும். இப்படிப்பட்ட ரக்கூன்கள், சமீப நாட்களில் பகலில் மனிதர் வசிப்பிடங்களைத் தேடி வருகின்றன. இரண்டு கால்களால் நிமிர்ந்து நிற்கின்றன. கண்களை உருட்டி மிரட்டுகின்றன. பற்களைக் காட்டிப் பயமுறுத்துகின்றன. “ரக்கூன்களின் விநோதமான நடவடிக்கைகளுக்குக் காரணம், அவை நோயால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கலாம். வைரஸ் பாதிப்பு என்றால் அவை ஒரு ரக்கூனிலிருந்து இன்னொரு ரக்கூனுக்குப் பரவிவிடும். இப்படி இருக்கும்போது அவை புறச் சூழலை மறந்து, மோசமாக நடந்துகொள்கின்றன. தடுப்பூசி போடாவிட்டால் வீட்டு நாய்களுக்குக் கூட இந்தப் பிரச்சினை ஏற்படலாம்” என்கிறார்கள் விலங்குகள் ஆராய்ச்சியாளர்கள்.

சாது மிரண்டால் நாடு தாங்காது!

சீ

னாவின் வுஹான் பகுதியில் வசிக்கும் 50 வயது சென், கடுமையான முதுகுத் தண்டு நரம்பணு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். வைட்டமின் பி12 குறைபாடுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 20 வயதில் 55 கிலோ எடை இருந்த சென், அசைவ உணவைச் சாப்பிடுபவராக இருந்திருக்கிறார். திடீரென்று எடை குறைப்பின் மீது அவருக்கு ஆர்வம் வந்தது. உடனே அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். சைவத்திலும் எல்லாச் சத்துகளும் நிறைந்த உணவுகளை அவர் சாப்பிடவில்லை. மிகக் குறைவான உணவுப் பொருட்களை, குறைந்த அளவே எடுத்துக்கொண்டார். இதனால் மிக வேகமாக உடல் எடையை இழந்தார். 45 கிலோ எடையுடன் அதே உணவுப் பழக்கத்தைக் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். “என்னுடைய உணவுப் பழக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென்று என் கால்கள் இரண்டும் சமமாக இல்லாதது போன்று தோன்றியது. இரண்டு அடி எடுத்து வைத்தபோது, நடக்க முடியாமல் விழுந்துவிட்டேன். என் கைகளும் கால்களும் உணர்ச்சியற்று இருந்தன. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினையாக இருக்குமோ என்று ஆராய்ந்தனர். இறுதியில் பி12 வைட்டமின் குறைபாட்டால் நான் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று தெரிவித்தனர். சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பி12 அளவில் 10% மட்டுமே எனக்கு இருக்கிறது. இதற்குக் காரணம் நான் மேற்கொண்ட உணவுப் பழக்கம்தான். எடை அதிகரிக்கும் என்று சைவ உணவிலும் அனைத்துச் சத்துகளையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. பி12 மாத்திரைகளையும் பயன்படுத்தவில்லை. இதனால் என் முதுகுத் தண்டில் உள்ள நரம்பணுக்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சிறிது நாட்கள் கழித்து மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் என்னால் நிரந்தரமாக நடக்க முடியாமலே போயிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்கிறார் சென். “பி12 இறைச்சியில்தான் அதிகம் இருக்கிறது. மீன், ஆலிவ் எண்ணெய் போன்று நல்ல கொழுப்பு கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இறைச்சி சாப்பிடாதவர்கள் அதைச் சரிகட்டும் விதத்தில் உணவுகளையும் சத்து மாத்திரைகளையும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எடை குறைப்பை விட உயிர் வாழ்தல் முக்கியமானது” என்கிறார் சென்னின் மருத்துவர்.

எடை குறைப்பின் விபரீதம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x