Published : 07 Apr 2018 08:10 AM
Last Updated : 07 Apr 2018 08:10 AM

உலக மசாலா: ஓநாய்களால் வளர்க்கப்பட்ட நிஜ மெளக்ளி!

ஸ்

பெயினைச் சேர்ந்த 72 வயது மார்கோஸ் ரோட்ரிகஸ் பான்டோஜா, 12 ஆண்டு காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருக்கிறார். 3 வயதில் தாயை இழந்தார். தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால் தனித்துவிடப்பட்டார். ஒருநாள் மலைக்கு அருகில் வசித்த ஆடு மேய்ப்பவரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடமிருந்து சில வேலைகளையும் கருவிகளை உருவாக்குவதையும் கற்றுக்கொண்டார். 7 வயதில் முதியவர் இறந்துவிட, ஆதரிக்க ஆள் இன்றி அலைந்தவர், காட்டுக்குள் சென்றுவிட்டார்.

“எனக்குக் காட்டு விலங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால் விலங்குகளிடம் அன்பாகப் பழகினேன். அப்படித்தான் ஒரு ஓநாய் என்னை அன்புடன் அரவணைத்தது. தாயின் அன்பை ஓநாயிடம்தான் பெற்றேன். என்னை எப்போதும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும். பெர்ரிகளையும் காளான்களையும் சாப்பிட சொல்லும். விஷ உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கும். அதன் குட்டிகளையும் என்னையும் ஒன்றாக விளையாட வைக்கும். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளின் மொழி புரிய ஆரம்பித்தது. நான் எங்கிருந்து குரல் கொடுத்தாலும் சில நிமிடங்களில் ஓநாய்கள் என்னிடம் வந்து சேர்ந்துவிடும்.

ஓநாய்கள், மான்கள், பாம்புகள் என்று பல விலங்குகளும் நானும் ஒரே குகையில் தங்கியிருப்போம். தூங்கும்போது பலமுறை என் மீது பாம்புகள் ஏறிப் போயிருக்கின்றன. ஒருநாளும் எந்த விலங்காலும் நான் ஆபத்தைச் சந்தித்ததே இல்லை. என் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தபோது, 19 வயதில் ராணுவ வீரரால் மீட்கப்பட்டேன். நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டேன். மொழி புரியவில்லை. மனிதர்களின் வாழ்க்கை முறை பிடிக்கவில்லை. காட்டுக்குள் ஓடிவிடலாம் என்று நினைக்காத நொடி இல்லை.

ஆனால் என்னை நிரந்தரமாகக் காட்டில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அடிக்கடி ஓநாய் அம்மாவையும் ஓநாய் தம்பிகளையும் பார்க்க காட்டுக்குள் சென்றுவிடுவேன். பிரத்யேக ஒலி எழுப்பினால், அவை அன்புடன் ஓடிவந்து என்னைக் கட்டிப் புரளும். காலப்போக்கில் என்னிடம் மனிதர்களின் மணமும் குணமும் வந்துவிட்டதால், காட்டில் குரல் கொடுத்தால் ஓநாய்கள் ஓடிவருவதில்லை. பதில் குரல் மட்டுமே கொடுத்தன. மனிதர்களால் வசிக்க முடியாத காட்டில் நான் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தேன். ஆனால் மனிதர்களுடன் வசிக்க ஆரம்பித்தபோதுதான் ஏமாற்றப்பட்டேன். சுரண்டப்பட்டேன். வஞ்சிக்கப்பட்டேன்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உதவி செய்கிறார்கள். பள்ளிகளில் என்னைப் பேச அழைக்கிறார்கள். பெரியவர்களை விடக் குழந்தைகளிடம் பேச எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் என்னுடைய அனுபவத்தைக் கேட்டு வியக்கிறார்கள். ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்.”

இப்படித்தான் சொல்கிறார் மார்கோஸ். ஆராய்ச்சியாளர்கள் இவரிடமிருந்து பல தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

ஓநாய்களால் வளர்க்கப்பட்ட நிஜ மெளக்ளி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x