Published : 06 Apr 2018 08:33 AM
Last Updated : 06 Apr 2018 08:33 AM

உலக மசாலா: மாடுகளுக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் பெண்

டந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்த ஃபுகுஷிமா, தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது. சுனாமி மற்றும் அணு உலை விபத்தால் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். 1,60,000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். ஆனால் மனிதர்களால் வளர்க்கப்பட்ட கால்நடைகள் அங்கேயே விடப்பட்டன. 3,500 மாடுகளின் உடலில் கதிர்வீச்சு அளவு அதிக மாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய மாடுகள் கதிர்வீச்சு பாதிப்பால் மடிந்து போயின. மீதி இருந்த 1,500 மாடுகளை உரிமையாளர்களின் அனுமதி பெற்று, அரசாங்கமே கொன்றுவிட்டது. சில உரிமையாளர்கள் மட்டும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதிய மாடுகளைக் கொல்வதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களிடமிருந்து ஆண்டுக்கு 1.3 லட்சம் ரூபாயைப் பெற்று, மாடுகளைப் பராமரித்து வருகின்றனர். இவற்றில் 11 மாடுகள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன. இந்த மாடுகளைப் பராமரிப்பதற்காக ஃபுகுஷிமா வருவதற்கு மக்கள் அஞ்சுகிறார்கள். இதைப் பார்த்த இரக்கக் குணம் படைத்த இளம்பெண் டானி சகியுகி, இந்தப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். இரவு நேரத்தில் வேலைக்குச் செல்கிறார். பகல் நேரத்தில் மாடுகளைப் பராமரிக்கிறார். “விபத்து நடந்தபோது நான் டோக்கியோவில் இருந்தேன். செய்தித்தாள்களில் மாடுகள் ஆதரவு இன்றி இருப்பதைப் பற்றிப் படித்தேன். உடனே மாடுகளைக் காப்பாற்ற முடிவெடுத்தேன். அரசாங்கம் இது ஆபத்தான பகுதி என்று எச்சரித்தது. நான் உதவி செய்யாவிட்டால், வேறு யார் செய்யப் போகிறார்கள்? அதனால் துணிச்சலுடன் இந்த முடிவை மேற்கொண்டேன். ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று உணவு, தண்ணீர் கொடுத்து வந்தேன். விரைவிலேயே தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் தினமும் வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. மாடுகள் வசிக்கும் பகுதிக்குச் சற்றுத் தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாடும் தினமும் ஏராளமான லிட்டர் தண்ணீர் குடிப்பதால், நான் பலமுறை தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. உணவுகளையும் வெளியில் இருந்து கொண்டு வருகிறேன். 4 மணி நேரங்களுக்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்பதால், அதற்குள் வேலைகளை முடித்துவிடும்படிச் சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த மாடுகளுடன் இன்னும் கொஞ்ச நேரம் என்னால் செலவிட முடியும். ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இந்த இடம் இருப்பதால், இது அதிக ஆபத்தான பகுதியாக இருக்கிறது” என்கிறார் டானி சகியுகி.

மாடுகளுக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் டானியை என்னவென்று சொல்வது!

ட்ரினிடாட்டில் வசித்த 33 வயது ஷெரோன் சுகேடோ ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வந்தார். மிகப் பெரிய கோடீஸ்வரர். தொழில்முறையில் இவருக்கு ஏராளமான எதிரிகள் இருந்தார்கள். பலமுறை கொலை முயற்சியில் இருந்து தப்பியிருக்கிறார். பாதுகாப்பு ஆட்களுடன் வலம் வருவார். கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்திருப்பார். கடந்த வாரம் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை இவருக்கு அணிவித்து, சவப்பெட்டியில் வைத்திருந்தனர்!

நகைப் பிரியர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x