Published : 05 Apr 2018 09:15 AM
Last Updated : 05 Apr 2018 09:15 AM

உலக மசாலா: குழந்தையைத் தேடிய ஒரு தந்தையின் போராட்டம்

சீ

னாவின் செங்டு நகரில் வசிக்கும் வாங் மிங்கின் 4 வயது மகள், 24 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். தங்களுடைய பழக்கடையில் இவரும் இவரது மனைவியும் பரபரப்பாக விற்பனை செய்துகொண்டிருந்தனர். அப்போது மகள் வாங் க்ஃபெங் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மகளைத் தேடியபோது, அவரைக் காணவில்லை. நாள் முழுவதும் தேடியும் மகள் கிடைக்காமல், இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உள்ளூர் செய்தித்தாள்களில் குழந்தை காணவில்லை என்று தகவல் கொடுத்தார்கள். ஆனாலும் குழந்தை கிடைக்கவே இல்லை. வாங்குக்கு இன்னொரு மகள் இருந்தார். அவர் க்ஃபெங் போலவே இருப்பார். அதனால் அவரைப் படம் எடுத்து வைத்துக்கொண்டார். தான் செல்லும் இடங்களில், பார்க்கும் நபர்களிடம் எல்லாம் படத்தைக் காட்டி விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். மகளை தேடுவதற்காகவே 2015-ல் டாக்சி ஓட்டுநராக பணியில் சேர்ந்தார் வாங். தினமும் ஏராளமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் மகளின் படத்தைக் காட்டி விசாரித்துக்கொண்டே இருந்தார். இரண்டரை ஆண்டுகளில் சுமார் 17 ஆயிரம் மனிதர்களிடம் விசாரித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஒரு வாடிக்கையாளர் வாங்கின் கதையை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலானது. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் மீண்டும் செய்தி வெளிவந்தது. “என்றாவது ஒருநாள் என் மகள் கிடைப்பாள். அவளை என் அருகில் உட்கார வைத்து கார் ஓட்டுவேன். ஒரு அப்பாவாக உனக்கு எதையும் செய்யவில்லை, என்னை மன்னித்துவிடு மகளே என்று கேட்பேன்” என்ற வாங்கின் பேட்டியைக் கண்டு சீனர்கள் நெகிழ்ந்து போனார்கள். தொலைக்காட்சியில் பணிபுரியும் நி பிங், தன்னுடைய விலை மதிப்புமிக்க ஓவியங்களை விற்று, அதில் கிடைத்த 20 லட்சத்தை, க்ஃபெங் தேடும் பணிக்கு அளித்தார். இந்த விஷயம் இன்னும் பரவலாகச் சென்றடைந்தது. காவல் துறை, ஓர் ஓவியர் மூலம் வளர்ந்த க்ஃபெங் எப்படி இருப்பார் என்று ஒரு படம் வரைந்து வெளியிட்டது. அந்தப் படம் லட்சக்கணக்கில் பகிரப்பட்டது. செங்டுவிலிருந்து 1000 கி.மீ. தொலைவில் வசிக்கும் காங் யிங் இந்தப் படத்தைப் பார்த்தார். தன்னைப்போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காவல் துறையைத் தொடர்புகொண்டார். அடையாளங்கள் ஒத்துப் போயின. டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் முதல் தேதி காங் யிங், வாங்கின் மகள் க்ஃபெங் என்று உறுதியானது.

“காவல் துறையினர் பலமுறை அடையாளம் ஒத்துப் போகிறது என்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை தோல்வியில் முடிந்ததால், நான் இந்த முறை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. இந்த நாள் மகத்தானது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் மகள் கிடைத்துவிட்டாள். மகளை வரவேற்க எங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்திருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து மகளைத் தேடிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என்கிறார் வாங் மிங்.

குழந்தையைத் தேடிய ஒரு தந்தையின் போராட்டம் பிரமிக்க வைக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x