Published : 03 Apr 2018 08:25 AM
Last Updated : 03 Apr 2018 08:25 AM

உலக மசாலா: கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத பெதானி

மெரிக்காவைச் சேர்ந்த 28 வயது பெதானி ஹா மில்டன், அலைச் சறுக்கு வீரராக இருக்கிறார். 14 வயதில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, மிகப் பெரிய சுறாவின் தாக்குதலில் இடது கையை இழந்தார். 60% ரத்தத்தை இழந்துவிட்டதால் பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் நினைத்தனர். சற்றும் மனம் தளராமல், கதறி அழாமல், வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு ஒத்துழைத்தார். உயிர் பிழைத்தார். இனிமேல் அவரது வாழ்க்கையில் அலைச் சறுக்கு விளையாட்டு இல்லை என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தனர். நினைவு தெரிந்த நாளில் இருந்து அலைச் சறுக்கு விளையாட ஆரம்பித்தவர் பெதானி. இவரது அப்பா, அம்மா, தம்பி கள் என அனைவரும் அலைச் சறுக்கு விளையாட்டு வீரர்களாக இருந்தனர். கடற்கரையில் ஒருநாள் நின்றுகொண்டு விரக்தியாகப் பார்த்துக்கொண்டிருந்த பெதானியை, அலைகள் இரு கரம் நீட்டி அழைத்தன. சற்றும் யோசிக்காமல் அலைச் சறுக்கு அட்டையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிட்டார். குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். சில மணி நேர முயற்சிக்குப் பிறகு ஒற்றைக் கையில் விளையாடும் உத்தி வசப்பட்டது. தினமும் கடுமையான பயிற்சி செய்ததில் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ளும் தைரியம் வந்தது. உள்ளூர் போட்டியில் 5-வது இடத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலிடத்தைப் பிடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். கை இழந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்முறை அலைச் சறுக்கு வீரராகி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து அலைச் சறுக்கு விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தார். 2013-ம் ஆண்டு ஆடம் டிர்க்ஸைத் திருமணம் செய்துகொண்டார். 2015-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எங்கள் வீட்டில் நான்காவது உறுப்பினர் வந்திருக்கிறார். மனைவியாகவும் தாயாகவும் இந்த நாட்களை மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்கிறார் பெதானி. ‘Soul Surfer’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை, திரைப்படமாக வந்திருக்கிறது.

வாழ்த்துகள் பெதானி!

லகம் முழுவதும் கெட்சப் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. ஆனால் கெட்சப் கொட்டி, துணிகள் வீணாகின்றன என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் எமிலி வில்லியம்ஸ். கெட்சப்பை மெல்லியத் துண்டுகளாக உருவாக்கிவிட்டார். இதனால் கெட்சப் வழிந்து கீழே விழாது, துணியில் படாது. “பழகிய ஒரு விஷயத்தில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. கெட்சப் துண்டுகள் கிட்டத்தட்ட கெட்சப் சுவையை ஒத்திருக்கின்றன. இதனால் முதலில் சுவைப்பவர்களுக்குத் திருப்தி கிடைக்காது. ஆனால் சில முறை சாப்பிட்ட பிறகு பழகிவிடுவார்கள். 23 நாட்களை இலக்காக வைத்துக்கொண்டு மிக வேகமாக இதைப் பரப்பி வருகிறோம். பொரித்த உணவுகளை இதில் நனைத்துச் சாப்பிட முடியாது. ஆனால் பர்கர், சாண்ட்விச் போன்றவற்றில் வைத்துச் சாப்பிட முடியும். இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு கெட்சப் துண்டுகளை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் எமிலி வில்லியம்ஸ்.

புதிய வரவு கெட்சப் துண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x