Published : 30 Mar 2018 09:31 AM
Last Updated : 30 Mar 2018 09:31 AM

உலக மசாலா: 68 வயதில் 20 வயது இளைஞர்

சீ

னாவின் ஷாங்காய் நகரில் வசிக்கும் ஹு ஹாய், 20 வயது இளைஞர்போல் இருக்கிறார். ஆனால் இவரது வயது 68. தோற்றம் மட்டுமின்றி, இவருடைய உடல், உடல்மொழி, உடை எல்லாமே இவரை இளைஞராகவே காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘மோஸ்ட் மாடர்ன் கிராண்ட்பா’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். 1950-ம் ஆண்டு பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்துவிட்டார். சின்ன வயதிலிருந்தே ஹு ஹாய்க்கு விளையாட்டு மீது ஆர்வம். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். கொஞ்சம் வளர்ந்த பிறகு, உடற்பயிற்சியிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த இளைஞருக்கு இங்கே என்ன வேலை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பார்வையாளர்களும் கேட்டனர். எல்லோருக்கும் தன்னுடைய வயதையும் அதற்கான சான்றையும் காட்டிவிட்டே, போட்டியில் கலந்துகொண்டார். ‘மிக நவீனமான தாத்தா’ பட்டம் வென்றதும் வெளியுலகில் பிரபலமானார். அதன் பிறகு தொலைக்காட்சி, ஃபேஷன் பத்திரிகைகள், மாடலிங் துறை என்று சகலவற்றிலும் இவரது பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

“என்னுடைய இந்தத் தோற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருக்க யோகா செய்கிறேன். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்கிறேன். தினமும் 30 நிமிடங்கள் படிகளில் ஏறி இறங்குகிறேன். குறைவான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறேன். சில சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறேன். இவை தவிர நான் எப்போதும் என்னை 20 வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்கிறேன். வயது என்பது வெறும் எண்கள்தான். நாம் எப்படி உடலை வைத்துக்கொள்கிறோம், எப்படி நல்ல எண்ணங்களை நிறைத்துக்கொள்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொருத்தே நம் உருவம் வெளிப்படுகிறது. முதுமை என்பது தவிர்க்க இயலாதது. எல்லோரும் ஒருநாள் முதுமையடையத்தான் போகிறோம். ஆனால் அந்த முதுமையை ஏதோ கெட்ட அம்சம் போலவும் மரணத்தை நெருங்குவதுபோலவும் நினைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியமற்றது. இந்த எண்ணம் உங்கள் வயதைவிட, அதிக முதிர்ச்சியைக் கொண்டுவந்துவிடும். நான் மரணமடையும் கடைசி நொடியிலும் என்னை இருபது வயது இளைஞனாகவே நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு மனிதனுக்கும் மனம், உடல், உடலியக்கம் என 3 விதமான வயதுகள் இருக்கின்றன. கடைசி இரண்டு வயதுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள முடியும். என்னுடைய உடல், உடலியக்கம் சார்ந்த வயது 40. ஆனால் என் மனதின் வயது 20 ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருபது வயது இளைஞர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அவரைப் போலவே இளமையாக சிந்திக்கவும் முடியும். இளமை என்பது அணுகுமுறைதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசமான வாழ்க்கையை வாழுங்கள்” என்கிறார் ஹு ஹாய்.

ஆஹா! 68 வயதில் 20 வயது இளைஞர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x