Published : 29 Mar 2018 08:13 AM
Last Updated : 29 Mar 2018 08:13 AM

உலக மசாலா: நிஜ ’ஃபாரஸ்ட் கம்ப்’

ங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது ராப் போப் ஓராண்டுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறார். 1994-ம் ஆண்டு வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தில் கதாநாயகன் கம்ப், தன்னுடைய சிறு வயது காதலி ஜென்னியைத் தேடி ஓடுவார். சுமார் 15,248 மைல் தூரம் ஓடுவதாக அந்தத் திரைப்படம் அமைந்திருக்கும். ஃபாரஸ்ட் கம்பின் இந்த சாதனையை நிஜ வாழ்க்கையில் முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார் ராப் போப். ஓட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். பொதுவாக இதுபோன்ற நீண்டகால ஓட்டத்துக்கு பல மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் திரைப்படத்தில் வரும் கம்ப் போலவே எவ்விதப் பயிற்சியும் இன்றி, அமெரிக்காவில் திடீரென்று சாதனை ஓட்டத்தைத் தொடங்கிவிட்டார் ராப். தினமும் 40 மைல் தூரம் ஓடுகிறார். சுட்டெரிக்கும் வெயில், தாங்க முடியாத குளிர், கொட்டித் தீர்க்கும் மழை என்று எந்தப் பருவநிலையையும் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். பயிற்சி எடுக்காமல் ஓடுவதால் பலமுறை காயம் ஏற்பட்டிருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. தனிமை வாட்டியிருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தன் சாதனை ஓட்டத் திட்டத்திலிருந்து இவர் பின்வாங்கவில்லை.

“ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்ததிலிருந்து கம்பின் சாதனையை நிஜத்தில் முறியடிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. அதில் கம்ப்பாக நடித்த டாம் ஹாங்க்ஸ் எல்லோரையும் தன் நடிப்பாலும் அன்பாலும் ஈர்த்துவிடுவார். கம்ப் யாரையும் எடை போட மாட்டார். தோல் நிறம், இனம், மொழி, பணம் என எந்தப் பாகுபாட்டையும் பார்க்க மாட்டார். அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நாமும் கம்ப்பாக மாற மாட்டோமா என்று ஏங்குவோம். அதன் பாதிப்பால் ஓட முடிவெடுத்தேன். ஆனால் திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆரம்பித்தபோது அவ்வளவு எளிதாக இல்லை. 4 கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர முடிவெடுத்தேன். பருவநிலை மாற்றம் என் ஓட்டத்தை மிகவும் கடினமானதாக மாற்றியது. என் தாடியில்கூட பனி படர்ந்தபடி ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் கம்ப் அணிந்துகொண்ட ஆடைகள், தொப்பிகள்போல் பயன்படுத்தினேன். ஆனால் பருவநிலைக்கு ஏற்ப பிறகு அதை மாற்றிக்கொண்டேன். என் பயணத்தை ஆவணப்படுத்தும் விதத்தில் ஓட்டத்தின் நடுவே நான் கடக்கும் முக்கியமான இடங்களில் படம் எடுத்துக்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் படங்களையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். கம்ப்பின் சாதனையை முறியடித்து, 409 நாட்களில் 15,600 மைல்களைக் கடந்துவிட்டேன். என்னுடைய இலக்கை அடைய இன்னும் 200 மைல்கள்தான் ஓட வேண்டும். ஆனால் எனக்கு மகள் பிறந்திருப்பதால் இங்கிலாந்துக்குத் திரும்பிவிட்டேன். ஏப்ரல் மாதம் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்” என்கிறார் ராப் போப்.

ரீல் சாதனையை ரியல் சாதனையாக மாற்றியிருக்கும் ராப் போப்புக்கு வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x