Published : 25 Mar 2018 11:11 AM
Last Updated : 25 Mar 2018 11:11 AM

உலக மசாலா: பொம்மை மறு உருவாக்கம்

உக்ரைனைச் சேர்ந்த ஆல்கா கமனெட்ஸ்கயா அழகான பொம்மைகளைச் செய்து உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பி யிருக்கிறார். விலை மலிவான பொம்மைகளை வாங்கி, அதைத் தன் கற்பனைத் திறனாலும் கலைத்திறனாலும் முற்றிலும் வேறு ஒரு பொம்மையாக உருவாக்கி விடுகிறார். இந்தப் பொம்மைகள் நிஜ மனிதர்களைப்போல் அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன! சின்ன வயதில் பொம்மைகளுடன் பொழுதைக் கழித்தவர், வளர்ந்த பிறகு அதை மறந்து போனார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மான்ஸ்டர் ஹை பொம்மைகளைப் பார்த்தார். உடனே சிலவற்றை வாங்கி வீட்டில் வைத்தார். அப்போது இணையதளத்தில் ஏற்கெனவே இருக்கும் பொம்மையை வேறு ஒரு பொம்மையாக மாற்றும் கலைஞர்களைப் பற்றிப் படித்தார். ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து பொம்மைகளை மறு உருவாக்கம் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

2013-ம் ஆண்டு முதல் பொம்மையை மறு உருவாக்கம் செய்தார். அது மிக அழகாகத் தோன்றியது. ஆனால் மற்றவர் பார்வையில் அப்படி இல்லை. தொடர்ந்து 3 மாதங்கள் பயிற்சி செய்து, மிகப் பிரமாதமான பொம்மையை உருவாக்கிவிட்டார். அன்று ஆரம்பித்த பொம்மை விற்பனை இன்றளவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. “என்னுடைய பொம்மைகள் பிரபலமான பிறகு எனக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. சில நேரங்களில் ஆர்டர்களைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு வேலைகள் குவிந்துவிடும். சாதாரண பொம்மைகளில் இருந்து பிரபலமானவர்களின் உருவங்களைக் கூட உருவாக்கிவிடுகிறேன்” என்கிறார் ஆல்கா.

கலக்கலான பொம்மைகள்!

அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் செர்கியோ லாஸாரோவிச். இவர் ஆணாக இருந்தாலும் சமீபத்தில் தான் ஒரு பெண் என்றும் தன் பெயரை செர்கியா என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் தென் அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சிலர் இவர் திருநங்கையாக இருக்கலாமோ என்று எண்ணுகிறார்கள். இல்லை, இவருக்குத் திருமணமாகி 25 ஆண்டுகளாகிவிட்டன.

இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். அர்ஜென்டினாவில் ஆண்கள் 65 வயதிலும் பெண்கள் 60 வயதிலும் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காகவே தன்னைப் பெண் என்று அறிவித்துக்கொண்டார் இவர். இவரது குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டாம் என்றார்கள். ஆனால் பாலினத்தை மாற்றும் முன் வழக்கறிஞரைச் சந்தித்தார்.

அவர் வேலை செய்யும் காலகட்டத்தில் இருக்கும் பாலினப் பாகுபாட்டை எதிர்த்து வழக்கு தொடுப்போம் என்றார். செர்கியோவும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கால் எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. பிறகுதான் தானே பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொண்டார். மாற்றுப் பாலினத்தவருக்கு இங்கே சட்டப்படி பாதுகாப்பும் சலுகைகளும் கிடைப்பதால், அதைத் தவறாக இவர் பயன்படுத்திவிட்டார் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். “எல்லோருக்கும் ஓய்வு பெறும் வயது 65 என மாற்றுங்கள். அல்லது 60 என்று மாற்றுங்கள். ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் செர்கியோ. இவரது செயலால் ஓய்வு பெறும் வயதில் நிலவும் பாலினப்பாகுபாடு எதிர்காலத்தில் களையப்படலாம் என்கிறார்கள்.

ஓய்வு பெறும் வயதில் எதுக்கு இந்தப் பாகுபாடு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x