Published : 24 Mar 2018 08:46 AM
Last Updated : 24 Mar 2018 08:46 AM

உலக மசாலா: மலைப்பாம்புக்கு ஸ்கேன்!

மெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள் மருத்துவர்கள். மலைப்பாம்பை ஸ்கேன் செய்து பார்த்துவிட முடிவெடுத்தனர். 19 அடி நீளமும் 63.5 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை 6 பேர் தூக்கி, ஒரு பெட்டியில் வைத்து, ஸ்கேன் மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே மலைப்பாம்புக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, ஸ்கேன் கருவியில் வைக்கப்பட்டது. மிக நீளமான மலைப்பாம்பு என்பதால் இரண்டாக மடித்து படுக்க வைத்தனர். முன்பக்கம் ஒன்றும் பின்பக்கம் ஒன்றுமாக இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட்டது. “எங்கள் ஊழியர்தான் மலைப்பாம்பின் முகம் வீக்கமாக இருப்பதைக் கண்டறிந்தார். அடிப்படை மருத்துவம் செய்து பார்த்தோம். சரியாகவில்லை. விலங்குகளுக்கு எக்ஸ்ரே மிகச் சிறந்த பலனை அளிப்பதில்லை. அதனால் சிஏடி ஸ்கேன் செய்ய முடிவெடுத்தோம். ஸ்கேனில் பிரச்சினை தெரிந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் குணப்படுத்திவிடுவோம். ஒரு மலைப்பாம்புக்கு ஸ்கேன் செய்தது இதுதான் முதல்முறை. அந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறாள் ஹன்னா” என்கிறார் பூங்காவின் நிர்வாகி.

அட! மலைப்பாம்புக்கு ஸ்கேன்!

வி

யட்நாமின் ஹானோய் நகரில் நோயுற்ற காட்டுப்பன்றியை நாய்கள் வேட்டையாடும் நிகழ்ச்சியை ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விஷயத்தைச் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியது. வேட்டையை நேரில் காண்பதற்காகக் குறிப்பிட்ட நாளன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஸ்மார்ட்போன்கள், கேமராக்களுடன் குவிந்தனர். ஒரு பெரிய மைதானத்தில் கூண்டில் கொண்டுவரப்பட்ட காட்டுப் பன்றியை வெளியேவிட்டனர். விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் காட்டுப்பன்றி வேகமாக நடக்க ஆரம்பித்தது. திடீரென்று மிகப் பெரிய வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டனர். அவற்றைக் கண்டவுடன் காட்டுப்பன்றி பயந்து ஓட முயற்சி செய்தது. ஆனால் நோயாலும் ஒற்றையாக இருப்பதாலும் நாய்களைக் காட்டுப்பன்றியால் சமாளிக்க முடியவில்லை. வலியில் கதறியது. அங்கும் இங்கும் ஓடியது. நாய்களும் துரத்தி, துரத்தி வேட்டையாடின. கூடியிருந்த மக்களும் காட்டுப்பன்றியின் பின்னாலேயே சென்று வீடியோ, ஒளிப்படங்கள் எடுத்தனர். இறுதி யில் காட்டுப்பன்றி உயிரை விட, வேட்டை நாய்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பின. வீடியோக்களும் ஒளிப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. உலகமே அதிர்ச்சியடைந்தது. விலங்குகள் நல ஆர்வலர் வு நகோக் தான், “இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை என்னவென்று சொல்வது? காட்டுமிராண்டித்தனமான நாகரிகமற்ற செயல். மனிதர்கள் தங்களுடைய தனித்துவத் தன்மையான மனிதத்தைத் தொலைத்துவிட்டார்களா? திட்டமிட்டுச் செய்த இந்தச் செயலை மன்னிக்கவே கூடாது” என்கிறார். இது தன்னிச்சையாக நடந்த நிகழ்ச்சி, எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்போம் என்றும் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறது காவல் துறை.

மனிதர்களையே அடித்துக் கொல்லும் இரக்கமற்ற உலகம், காட்டுப்பன்றிக்குக் கருணை காட்டுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x