Last Updated : 22 Mar, 2018 01:27 PM

 

Published : 22 Mar 2018 01:27 PM
Last Updated : 22 Mar 2018 01:27 PM

திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, தமிழ்மொழி மிகத் தொன்மையானது - ஆய்வில் தகவல்

திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 4,500 ஆண்டுகள் பழமையானது. அதிலும் தமிழ் மிகத் தொன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையும், டேராடூனில் உள்ள இந்தியன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் அமைப்பும் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கை ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திராவிட மொழிக்குடும்பங்கள் என்பது 80 வகையான மொழிகளைக் கொண்டது. ஏறக்குறைய தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதியில் 22 கோடி மக்களால் பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த மொழிகளின் ஏறக்குறைய 4,500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம்.

திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாகத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் கருதப்படுகின்றன. அதிலும் தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழியாகக் கருதப்படுகிறது.

உலகளவில் சமஸ்கிருதமும், தமிழ்மொழியும் மிகவும் பழமையான மொழியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சமஸ்கிருத மொழியைப் போல் அல்லாமல், தமிழ்மொழி தன்னுடைய பழமைக்கும், இப்போதுள்ள நவீனத்துவத்துக்கும் இடையே தன்னை தொடர்புப் படுத்திக்கொண்டுள்ளது.

இது குறித்து மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையின் ஆய்வாளர் அன்னேமரே வெரீக் கூறுகையில், 

‘‘ஐரோப்பியவும், ஆசியா பகுதிகளும் இணைந்திருந்த ஈரோசியா வரலாறு குறித்து புரிந்து கொள்ள திராவிட மொழிக் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும். மற்ற மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதிலும் திராவிட மொழிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

திராவிட மொழிகள் பூகோளரீதியா பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவான காலம் இல்லை. ஆனால், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணைக் கண்டம் என்பது பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன் இந்திய-ஆரியர்கள் வருகைக்கு முந்தைய மொழியாக இருக்கலாம்.

இப்போதுள்ள நிலையைக் காட்டிலும், திராவிட மொழிகள் அந்த காலத்தில், மேற்கு திசையில் பரவலாகப் பரவி இருக்கலாம்.

திராவிடமொழிகள் எப்போது உருவாகின, எங்கே தோன்றின என்பது குறித்த கேள்விகளுக்கு விடை தேடும் போது, 20 திராவிட மொழிகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் தெரியவந்தது எனத் தெரிவித்தார்.

இது குறித்து வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் பேராசிரியர் விஷ்ணுபிரியா கொலிப்பாக்கம் கூறுகையில் ‘ ‘‘திராவிட மொழிபேசும் மக்களிடம் இருந்து முதல்கட்ட தகவல்களை சேகரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் திராவிட மொழிகளின் வரலாற்றுக் காலம் என்பது 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x