Published : 08 Mar 2018 09:28 AM
Last Updated : 08 Mar 2018 09:28 AM

உலக மசாலா: அரசியல்வாதிகளை தண்டிக்கும் மக்கள்

பொ

துவாக அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யாவிட்டால், அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை எதுவும் அளிப்பதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் தோற்கடித்தால்தான் உண்டு. ஆனால் பொலிவியாவின் வட பகுதியில் ஒழுங்காகப் பணியாற்றாத அரசியல்வாதிகளுக்கு, மக்கள் பாரம்பரிய முறைப்படி தண்டனை அளித்துவருகிறார்கள். சான் புனவென்ச்சுரா என்ற நகரத்தின் மேயராக இருக்கிறார் ஜாவியர் டெல்காடோ. இவரது பணி மக்களுக்குத் திருப்தியாக இல்லை. இரண்டு கம்பங்களுக்கு இடையே ஓர் அகலமான பலகையை இணைத்து, அதில் துளைகள் போட்டு வைத்திருக்கிறார்கள். நிலத்தை விட்டுச் சற்று மேலே இருக்கும் இந்தப் பலகையின் துளைகளுக்குள் கீழே அமர்ந்தவாறு கால்களை நுழைத்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். பாரம்பரியமான இந்தத் தண்டனை, இன்றளவும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது. மேயர் மீது மிகுந்த கோபத்தில் இருந்த மக்கள், அவருக்கும் அந்தத் தண்டனையை விதித்தனர். ஒரு மணி நேரம் பலகையில் கால்களை நுழைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மேயர். இந்தக் காட்சியைத் தென் அமெரிக்க ஊடகங்களும் சமூக வலைதளங்களும் உலகம் முழுவதும் பரப்பிவிட்டன.

பிப்ரவரி 25-ம் தேதி மேயர் ஒரு பாலத்தைத் திறந்து வைப்பதற்காக வந்தார். வழியில் மக்கள் கூடி நின்றனர். அந்த விழாவில் பங்கேற்க விடாமல், தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படி கூறினர். “எனக்கு எதற்காகத் தண்டனை என்பதை யாரும் விளக்கவில்லை. என் தரப்பு நியாயத்தையும் அவர்கள் கேட்கவில்லை. மக்களிடம் எதிர்த்து வாதிடுவதைவிட, தண்டனை பெற்றுச் செல்வதுதான் அந்தச் சூழலுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை ஏற்றுக்கொண்டேன்” என்கிறார் மேயர்.

‘‘மேயர் பொய் சொல்கிறார். இவரைப் போன்று மிக மோசமான மேயரை நாங்கள் சந்தித்ததில்லை. இவர் பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளில், மூன்றாவது முறையாக இந்தத் தண்டனையைப் பெற்றிருக்கிறார். பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் நடவடிக்கை சரியில்லாததால், தண்டனை அளிக்கப்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு, 2 மாதங்கள் இந்த நகரை விட்டுச் சென்றுவிட்டார். பணிகள் அனைத்தும் முடங்கிவிட்டன. அவர் திரும்பிவந்த போது இரண்டாவது முறை தண்டனை பெற்றார். வேலை ஒழுங்காகச் செய்யாதது, பொய் சொன்னது போன்ற குற்றங்களுக்கு மட்டுமே இந்தத் தண்டனை. ஊழல் போன்ற பெரிய குற்றங்களுக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எங்கள் வழக்கம்” என்கிறார் உள்ளூர்க்காரர் டேனியல் சல்வடார்.

‘‘நான் இந்த நகரின் மேயராகி, நன்றாக மாட்டிக்கொண்டேன். ஒரு சிலர்தான் இப்படி தண்டனைகளை அனுபவித்து வருகிறோம். இதை எப்படியாவது நீக்க வேண்டும்” என்கிறார் ஜாவியர் டெல்காடோ. பொலிவியாவின் பல நகரங்களில், ‘சோம்பேறியாக இருக்கக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது’ என்ற 3 கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றை மீறுகிறவர்கள் மக்களின் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

அடடா! அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் மக்களுக்கு ஒரு பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x