Published : 07 Mar 2018 09:39 AM
Last Updated : 07 Mar 2018 09:39 AM

உலக மசாலா: சமூக அவலம்

வி

யட்நாமின் வடக்கு பகுதியில் கருக்கலைப்புகள் மிக அதிகமாக நடந்து வருகின்றன. ஆண்டுக்கு 3 லட்சம் கருக்கலைப்புகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. இதில் உலக அளவில் 5-வது இடத்திலும் ஆசிய அளவில் முதல் இடத்திலும் இருக்கிறது வியட்நாம். பெரும்பாலான கருக்கலைப்புகள் சமூக அழுத்தங்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகிவிடுவதால் 20 முதல் 30 சதவீத கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. சிலர் மிக இளம் வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பதாலும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருக்கலைப்பு தவறு என்று நினைப்பவர்களும் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களும் சமூகத்துக்குப் பயந்து, போலித் திருமணத்தைச் செய்துகொள்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த போலித் திருமணங்கள், இன்று மிகப் பெரிய தொழிலாக வளர்ந்துவிட்டது. அவரவர் வசதிக்கு ஏற்ப, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப போலித் திருமணங்கள் நடத்திக் கொடுக்கப்படுகின்றன. மாப்பிள்ளை, அவரின் பெற்றோர், உறவினர்கள், விருந்தினர்கள் என்று அனைவருமே போலியானவர்கள். போலி மாப்பிள்ளைகள் சில மாதங்களிலிருந்து வருடங்கள்வரை கணவனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். வெளியுலகம் இந்த மாப்பிள்ளை நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கும், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு கருத்து வேற்றுமையால் பிரிந்துவிட்டதாகச் சொல்லி, போலி மாப்பிள்ளைகளை அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இவர் அடுத்து வேறு யாருக்காவது போலி மாப்பிள்ளையாக நடிக்கச் சென்றுவிடுவார்.

“நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் என் காதலன் ஓடிவிட்டான். அம்மாவுடன் கருக்கலைப்பு மையத்துக்குச் சென்றேன். 5 மாதக் குழந்தையைக் கலைக்க என் அம்மா சம்மதிக்கவில்லை. அதனால் போலித் திருமணம் செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். திருமணம் ஆகாமல் குழந்தை உண்டாவதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் எங்கள் சமூகத்தில் மிக மோசமாகப் பார்க்கப்படுகிறது. அதைத் தாங்கும் சக்தி இல்லாததால், நாங்கள் இந்த முடிவை எடுக்கிறோம். விளம்பரத்தைப் பார்த்து ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொண்டேன். போலி மாப்பிள்ளையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கட்டணத்தையும் செலுத்தினேன். திருமண விழாவை இலவசமாகச் செய்துகொடுத்தனர். மகன் பிறந்தான். என் அம்மா தன் பேரனை எல்லோரிடமும் மகிழ்ச்சியாகக் காட்டினார். ஓராண்டுக்குப் பிறகு அவர் சென்றுவிட்டார். எங்களைப் பொறுத்தவரை 3 லட்சம் ரூபாய்க்குள் எந்த அவமானத்தையும் சந்திக்காமல் ஒரு குழந்தையைப் பெற்று, நன்றாக வளர்த்து வருகிறோம். இனி தனியாக வளர்ப்பதில் சிரமமில்லை” என்கிறார் வான் தீன்.

“போலித் திருமணச் சேவையில் 1,000 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் போலித் திருமணங்கள்தான் நடந்தன. ஆனால் இந்த ஆண்டு மாதத்துக்கு 15 போலித் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை அவரவர் வசதிக்கு ஏற்ப கட்டணங்களை வைத்திருக்கிறோம். சிலர் மிகவும் ஆடம்பரமாக நடத்த விரும்பினால், அவர்களுக்குத் தனிக் கட்டணம். நாங்கள் மக்களுக்கு உதவி செய்வதற்கே போலித் திருமணச் சேவையில் இறங்கியிருக்கிறோம். இதில் சட்டத்துக்குப் புறம்பான எந்தக் காரியத்திலும் நாங்கள் ஈடுபடுவதில்லை. இதுவரை வாடிக்கையாளர்கள் எங்கள் மீது குறை சொன்னதில்லை. எல்லோரும் போலித் திருமணத்தை விரும்புகிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட பெண்கள், நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்று வாழ ஆரம்பிக்கிறார்கள்” என்கிறார் போலித் திருமணச் சேவை மையத்தை நடத்தும் நுகுயென் வான் தியன்.

சமூக அவலம்..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x