Published : 06 Mar 2018 09:12 AM
Last Updated : 06 Mar 2018 09:12 AM

உலக மசாலா: மகளை 11 ஆண்டுகளாக தேடும் தந்தை

ங்கிலாந்தைச் சேர்ந்த கேட் மெக்கனின் முதல் மகள் மெட்லின் 4 வயதில் காணாமல் போய்விட்டார். 11 ஆண்டுகள் கடந்த பின்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் காலம் கரைந்தாலும் கேட் இன்னும் நம்பிக்கையுடனும் துயரத்துடனும் தேடிக்கொண்டிருக்கிறார்.

“கடந்த 11 ஆண்டுகளாகத் துயரமான வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறேன். நண்பர்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காகப் போர்ச்சுகல் சென்றோம். அங்கே ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தோம். மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மகள் திடீரென்று காணாமல் போனாள். தேடாத இடமில்லை. கேட்காத ஆட்கள் இல்லை. ஒரு பலனும் கிடைக்கவில்லை. போர்ச்சுகல் காவல் துறை விபத்தில் மகள் இறந்துவிட்டாள் என்று சொல்லிவிட்டது. ஆனால் அதற்கான சாட்சி எதையும் காட்டவில்லை. அதனால் எங்களால் நம்ப முடியவில்லை. இங்கிலாந்து காவல் துறை மூலம் விசாரித்தபோது, யாரோ ஒருவர் எங்கள் மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. எங்களுக்கு நம்பிக்கை வந்தது. நாங்களே பணம் கொடுத்து தேடச் சொன்னோம். மகள் தொலைந்ததிலிருந்து என்னால் ஒருநாள் கூட நிம்மதியாகத் தூங்க முடிந்ததில்லை. எங்கே இருப்பாள், எப்படி இருப்பாள் என்ற சிந்தனையிலேயே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறேன்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்த நாட்கள், அன்னையர் தினம் போன்ற சிறப்பு நாட்களில் என் துயரம் பல மடங்காக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கடந்த மாதம் எங்களுடைய இரட்டைப் பெண் குழந்தைகளுக்குப் பிறந்தநாள். இந்த மாதம் என்னுடைய 50-வது பிறந்த நாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த நாட்களில் என்னால் அப்படி இருக்க முடியவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று எவ்வளவோ பேர் வருகிறார்கள். ஆறுதல் கூறுகிறார்கள். துக்கத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அவளின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இப்படி வளர்ந்திருப்பாள் என்று டிஜிட்டலில் உருவத்தை உருவாக்கி வருகிறேன். இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம்.

இன்னும் ஒன்றரைக் கோடி ரூபாய் கொடுத்து, நானும் கணவர் ஜெர்ரியும் தேடுதலைத் தொடரச் சொல்லியிருக்கிறோம். என் மகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறேன். மகள் தொலைந்த நிகழ்ச்சி எங்களுக்குத்தான் முக்கியமானது. மற்றவர்களை இந்தப் புத்தகம் ஈர்க்குமா என்று தெரியாது. ஆனாலும் இந்தப் புத்தகம் படிக்கும் யார் மூலமாவது மகள் எங்களுக்கு மீண்டும் கிடைத்து விடுவாள் என்ற காரணத்துக்காகவே புத்தகத்தை வெளியிட்டேன். இதுவரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனாலும் மகள் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் எங்களைவிட்டுப் போகவில்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என் மகளின் படத்தைக் காட்டி, இந்தக் குழந்தையைப் பார்த்தீர்களா என்று இன்றுவரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய விடா முயற்சியும் நம்பிக்கையும் பிரார்த்தனையும் விரைவில் மகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறேன்” என்கிறார் கேட் மெக்கன்.

இந்தத் தாயின் துயரம் விரைவில் மறையட்டும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x