Published : 04 Mar 2018 01:12 PM
Last Updated : 04 Mar 2018 01:12 PM

உலக மசாலா: நம்பிக்கை மோசடி செய்யலாமா?

ஜப்பானைச் சேர்ந்த 28 வயது தொழிலதிபர் மிட்சுடோகி ஷிகெடா. வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டு வருகிறார். இந்திய வாடகைத் தாய் மூலம் பெற்ற 2 குழந்தைகள் இவருக்கு ஏற்கெனவே இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு தாய்லாந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற, குழந்தை உருவாக்கும் மையத்தைத் தொடர்புகொண்டார். நேரில் சென்று விந்தணுவைக் கொடுத்தார். திடீரென்று ஒரு நாள் தாய்லாந்து குழந்தை உருவாக்கும் மையத்தில் ஊழல் நடைபெறுவதாக அறிந்தார். உடனே தாய்லாந்துக்கு வந்து விசாரித்தார். அதில் இவருக்கு 17 குழந்தைகள் பிறந்திருப்பதைக் கண்டுபிடித்தார். தீவிரமாக ஆராய்ந்ததில் ஒரு குடியிருப்பில் 9 குழந்தைகள், ஒரு பெண்ணால் பராமரிக்கப்பட்டு வந்தன. குடியிருப்பு மிகவும் மோசமாக இருந்தது. குழந்தைகள் 9 பேரையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் அவரது குழந்தைகள்தான் என்பது உறுதியானது. இன்னும் சில இடங்களில் வசித்த மேலும் 4 குழந்தைகளையும் கண்டுபிடித்தார். குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு வாடகைத் தாய்க்கும் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை கொடுத்தார். இதில் 4 தாய்கள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்தார்கள். அந்த 13 குழந்தைகளையும் சட்டப்படி ஜப்பானுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். குழந்தை உருவாக்கும் மையங்கள், யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை அதிகமாக உருவாக்கி விற்கின்றன என்ற குற்றம் சுமத்தினார்.

“மிட்சுடோகி கோடீஸ்வரர். ஒவ்வொரு வருஷமும் 10 முதல் 15 குழந்தைகள் வரை வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் இறக்கும்வரை குழந்தைகளை உருவாக்கித் தரும்படி விந்தணுவைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் நாங்கள் இத்தனை குழந்தைகளை உருவாக்கினோம். மற்றபடி நாங்கள் குழந்தைகளைக் கடத்தும் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவருக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் தேர்தலில் நிற்கும்போது கணிசமான ஓட்டுகள் தன்னுடைய பெரிய குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்” என்கிறார் குழந்தை உருவாக்கும் மையத்தின் நிறுவனர் மரியம் குகுனஷ்விலி.

“மிட்சுடோகி பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அதனால் அவருக்கும் குழந்தைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணைத்தை குழந்தை உருவாக்கும் மையம் தவறாக பயன்படுத்திக்கொண்டது. மையத்தின் மீது தவறில்லை என்றால் குழந்தைகள் உருவானதையோ, பிறந்ததையோ ஏன் தந்தைக்கு தெரிவிக்கவில்லை என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இதனால் நீதிமன்றம் குழந்தைகளை மிட்சுடோகியிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டது. 13 குழந்தைகளுக்கும் டோக்கியோவில் மிகச் சிறந்த பங்களா தயாராக இருக்கிறது. இப்போது மீதி 4 குழந்தைகளையும் கண்டுபிடித்துவிட்டோம். அவர்களையும் ஒப்படைத்துவிடுவோம்” என்கிறார் மிட்சுடோகியின் வழக்கறிஞர்.

தன்னையும் தன் குழந்தைகளின் அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என்று ஜப்பானிய ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார் மிட்சுடோகி. ஆனாலும் கஸ்டம்ஸ் துறையிலிருந்து ஒன்றிரண்டு படங்கள் வெளியாகிவிட்டன.

நம்பிக்கை மோசடி செய்யலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x