Published : 28 Feb 2018 08:38 AM
Last Updated : 28 Feb 2018 08:38 AM

உலக மசாலா: பணம் கொடுக்காத பெற்றோரை கொல்ல துணிந்த மகன்

ஷ்யாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரைக் கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை. கைதுக்கான காரணத்தை அறிந்ததும் உலகமே அதிர்ந்துவிட்டது. இளைஞரின் குடும்பம் வசதியானது. இவருக்கு ஒரு தங்கையும் உண்டு. தன் செலவுக்குப் பெற்றோர் பணம் கொடுப்பதில்லை என்ற வருத்தம் இளைஞருக்கு இருந்திருக்கிறது. அதனால் அம்மா, அப்பா, தங்கையைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். வீட்டை இருட்டாக்கி, கட்டை யால் தாக்கிக் கொல்வதற்கு முதல்முறை தயாரானார். ஆனால் விருந்தினர்கள் வந்தவுடன் அன்று அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது முறை தேநீரில் விஷம் கலந்து மூவருக்கும் கொடுத்தார். ஒரு துளி சுவைத்தவுடன் இளைஞரின் அப்பா நன்றாக இல்லை என்று மொத்த தேநீரையும் கொட்டிவிட்டார். மூன்றாவது முறை மெர்குரி மீட்டரை காரில் வைத்து, கொல்லும் முயற்சியில் இறங்கினார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தன்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தவர், தொழில்முறை கொலைகாரர்களைச் சந்தித்தார். தன் குடும்பத்தாரைக் கொலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் எப்படியோ காவல் துறைக்குத் தெரிந்துவிட்டது.

அடுத்த சந்திப்பில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், கொலைகாரர்களைப்போல் இளைஞரைச் சந்தித்தனர். தன்னுடைய வீடு எப்படி இருக்கும், எங்கே கண்காணிப்பு கேமரா இருக்கிறது, எந்த நேரத்தில் வந்தால் கொலை செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றெல்லாம் விளக்கமாகக் கூறினார் இளைஞர். இதைச் சரியாகச் செய்து முடித்தால் 35 லட்சம் ரூபாய் தருவதாகவும் சொன்னார். காவல் துறையினர் ஒப்புக்கொண்டனர். .

இளைஞரின் பெற்றோரைச் சந்தித்து, விஷயத்தைக் கூறினர். ஆனால் பெற்றோர் இதை நம்ப மறுத்தனர். கொலை செய்யும் அளவுக்குத் தங்கள் மகன் மோசமானவன் இல்லை என்று சொல்லிவிட்டனர். உடனே காவல் துறை ஒரு நாடகத்துக்கு ஏற்பாடு செய்தது. இளைஞர் சொன்ன நாளில், சொன்ன நேரத்தில் மூவரும் கொலை செய்யப்பட்டதுபோல் ஒப்பனை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவானது. அதற்குப் பெற்றோரும் ஒப்புக்கொண்டனர். குறிப்பிட்ட நாளில் மூவரும் வெவ்வேறு அறைகளில் கழுத்தில் வெட்டுப்பட்டு, ரத்தம் வெளியேறியதுபோல் ஒப்பனை செய்யப்பட்டனர். படங்களும் எடுக்கப்பட்டன. பிறகு இளைஞரைச் சந்தித்தார்கள் காவல் துறையினர். குடும்பத்தினரும் இளைஞருக்குத் தெரியாமல் அந்த இடத்தில் பதுங்கி இருந்தனர். படங்களைப் பார்த்த இளைஞர் மகிழ்ந்தார். தாம் சொன்னபடியே விரைவில் சொத்துகளை விற்று, 35 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்டதும் இளைஞரின் குடும்பம் அதிர்ந்துபோனது. காவல் துறை உடனே இளைஞரைக் கைது செய்தது.

“விசாரணையில் எங்கள் மகன் சொன்ன தகவல்கள் இன்னும் அதிர்ச்சியளித்தன. எங்கள் குழந்தைகளை இயல்பாகத்தான் வளர்த்தோம். தேவையான சுதந்திரம் கொடுத்தோம். கட்டுப்பாடு விதிக்க வேண்டிய விஷயங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தோம். ஏராளமான அன்பைச் செலுத்தினோம். எப்படிப் பெற்றவர்களையே கொலை செய்யும் அளவுக்கு மாறினான் என்பது புரியவில்லை. ஒரு பெற்றோருக்கு இதை விடத் தண்டனை என்ன இருந்துவிட முடியும்?” என்கிறார் இளைஞரின் அப்பா.

குற்றவாளியான இளைஞருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

பணம் என்றால் பெற்றோரையும் கொல்லச் சொல்லுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x