Published : 25 Feb 2018 09:39 AM
Last Updated : 25 Feb 2018 09:39 AM

உலக மசாலா: மூன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் சிகரெட் துண்டுகள்

லிபோர்னியாவைச் சேர்ந்த சாலி டாலி, புகைப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக, புகைத்துவிட்டுத் தூக்கி எறியும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி, சேகரித்தும் வருகிறார். கடந்த 14-ந் தேதியுடன் 10 லட்சம் சிகரெட் துண்டுகளைச் சேகரித்துவிட்டிருக்கிறார். தினமும் இடுக்கி, குப்பைத் தொட்டியுடன் கிளம்பி விடுகிறார். கண்ணில் படும் சிகரெட் துண்டுகளைச் சேகரிக்கிறார். தன்னுடைய சிறிய கருவியில் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்கிறார். “பத்து லட்சம் சிகரெட் துண்டுகளை மூன்றரை ஆண்டுகளில் நான் சேகரித்ததை எல்லோரும் சாதனையாக நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது வேதனை. சிகரெட் பிடிப்பவர்களை மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் தீங்கை விளைவிக்கிறது. குப்பைத் தொட்டியில் போடாமல், தெருவில் வீசும் சிகரெட் துண்டுகளே இவ்வளவு என்றால், மொத்த எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. ஒரு சில நாட்கள் 3 ஆயிரம் சிகரெட் துண்டுகளைக் கூடச் சேகரித்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பவர்களிடம் குப்பைத் தொட்டியில் முறையாகப் போடச் சொல்வேன். பிறகு சிகரெட் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கி, பழக்கத்தை விட்டுவிடும்படிக் கேட்டுக்கொள்வேன். புகைப் பிடிப்பதை விடுகிறார்களோ இல்லையோ, தெருவில் வீசாமல் குப்பைத் தொட்டியில் வீசும் வழக்கத்தையாவது சிலர் கடைபிடிப்பது என்னுடைய முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்” என்கிறார் சாலி டாலி.

சமூகத்துக்கு நல்லது செய்யும் சாலிக்கு வாழ்த்துகள்!

ஷ்யாவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்கு 2011-ம் ஆண்டு வோல்வோக்ராட் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருப்பதால், ஒரு வாரம் கூட உயிருடன் இருக்காது என்றார்கள் மருத்துவர்கள். அதனால் தாயிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அவரை மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றவர்களுக்குக் குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தை இறந்து இரண்டு நாட்களாகிவிட்டதாகச் சொன்னார்கள் வருத்தத்தோடு திரும்பிவிட்டனர். ஆனால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தைகள் காப்பகத்திலிருந்து, 2.6 லட்சம் ரூபாயைச் செலுத்தும்படி ரசீது வந்தது. பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. காப்பகத்துக்கு நேரில் சென்றனர். மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகளை மருத்துவமனை, இந்தக் காப்பகத்துக்குக் கொடுத்துவிடும். குழந்தை உயிருடன் இருக்கும்வரை பெற்றோர் கட்டணம் செலுத்த வேண்டும். 7 வயதான தங்கள் குழந்தை உயிரோடு இருப்பதைக் கண்டதும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மருத்துவமனைக்குச் சென்று விஷயத்தைக் கூறி நியாயம் கேட்டனர். தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டது மருத்துவமனை நிர்வாகம். பெற்றோர் நீதிமன்றத்துக்குச் சென்று முறையாகத் தங்கள் குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் காப்பகம் ஏன் 7 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலிக்காமல் இருந்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்கள் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர், மருத்துவமனை மீதும் காப்பகம் மீதும் வழக்குத் தொடுப்பார்களா என்று தெரியவில்லை.

என்ன அநியாயம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x