Published : 24 Feb 2018 07:44 AM
Last Updated : 24 Feb 2018 07:44 AM

உலக மசாலா: மரண பயத்தை காட்டிய சிங்கங்கள்

ங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் சஃபாரியில் சிங்கங்களைப் பார்க்க குழந்தைகளுடன் சென்றார் அபி டூட்ஜ். காருக்குள் அமர்ந்தபடி பூங்காவைச் சுற்றி வரும்போது, திடீரென்று கம்பிக் கதவைத் திறந்துகொண்டு சிங்கங்கள் ஆக்ரோஷமாக ஓடிவந்தன. “நானும் தோழியும் முன்பக்கம் அமர்ந்திருந்தோம். குழந்தைகள் பின்பக்கம் அமர்ந்திருந்தார்கள். சிங்கங்கள் வெளிவந்ததும் அத்தனை பேரும் பயத்தில் உறைந்து போனோம். சுமார் 30 சிங்கங்கள் எங்கள் காரைச் சூழ்ந்துகொண்டன. ஒரு சிங்கம் காரின் முன்பக்கக் கண்ணாடியில் காலால் ஓங்கி அறைந்தது. அடித்த வேகத்தில் கண்ணாடி உடைந்து, சிங்கங்களுக்கு இரையாகிவிடுவோம் என்று நினைத்தேன். யாரும் யாருடனும் பேசும் நிலையில் இல்லை. வேகமாக காரை எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது. அதற்கேற்ற உடல் பலமோ, மன தைரியமோ இல்லை. ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் சிங்கங்கள் கொஞ்சம் அசைந்தால் இன்னும் கோபமடைந்துவிடலாம் என்று பயந்தேன். 50 நிமிடங்களுக்குப் பிறகு சிங்கங்கள் கொஞ்சம் சாந்தமடைந்தன. பூங்கா ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறோம்” என்கிறார் அபி டூட்ஜ்.

ஐயோ… ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கே!

கிப்தைச் சேர்ந்த 30 வயது சமீஹா, திருமணம் ஆன 40 நாட்களில் விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்றிருக்கிறார். ஒரு சாண்ட்விச் கூட வாங்கித் தராத கஞ்சனாகத் தன் கணவர் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். “என் கணவர் அஹமது ஆசிரியராக இருக்கிறார். திருமணம் நடந்த இரவு, எனக்கு வெளியில் செல்வதெல்லாம் பிடிக்காது. பணமும் நேரமும் விரயம் என்றார். ஆனால் தினமும் ஒவ்வொரு விஷயத்திலும் கஞ்சத்தனத்தைக் காட்ட ஆரம்பித்தபோது வாழ்க்கை கடினமாகிவிட்டது. நல்ல வேலையில் இருக்கிறார். நல்ல சம்பளம் வாங்குகிறார். தவிர, வீட்டில் படிப்புச் சொல்லித் தருகிறார். ஒருநாள் கொஞ்சம் ரொட்டித்துண்டை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டேன். இன்னிக்கு ஏன் இவ்வளவு சாப்பிட்டே என்று கேட்டார். அந்த வாரம் முழுவதும் நான் ரொட்டி சாப்பிடக் கூடாது என்று தண்டனை கொடுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. என் மாமியாரிடம் சொன்னேன். அவர் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு, என்னை வெளியே அழைத்துச் செல்லும்படி கணவரிடம் சொன்னார். நாங்கள் இருவரும் முதல் முறை வெளியே சென்றோம். மிகவும் தாகமாக இருந்தது. ஏதாவது குடிக்க வாங்கித் தரும்படி கேட்டேன். குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரத்தில் பசி வந்துவிட்டது. சாண்ட்விச் கேட்டேன். நீ கேட்ட குளிர்பானம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். இனி எதுவும் வாங்கித்தர முடியாது என்று மறுத்துவிட்டார். ஒரு சாண்ட்விச் வாங்கித் தர முடியாத நிலையில் கணவர் இல்லை. வழியெல்லாம் என்னைத் திட்டிக்கொண்டே வந்தார். வாழ்க்கை வெறுத்துவிட்டது. காலம் முழுவதும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட முடியாது. என் பெற்றோரும் புரிந்துகொண்டனர்” என்கிறார் சமீஹா.

வாழ்க்கையைத் தொலைத்த கஞ்சத்தனம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x