Published : 23 Feb 2018 08:28 AM
Last Updated : 23 Feb 2018 08:28 AM

உலக மசாலா: சாம்பல் பாதி; கறுப்பு பாதி!

பி

ரான்ஸில் பிறந்த பூனை ஒன்று உலக முழுவதும் கவனத்தை ஈர்த்துவிட்டது. முகத்தின் சரி பாதி, சாம்பல் நிறமாகவும் மீதி கறுப்பாகவும் அமைந்திருக்கிறது. இரண்டு வெவ்வேறு மரபணுக்கள் சேரும்போது இப்படிப்பட்ட தோற்றம் உருவாவது உண்டு. இவற்றை கிமேரா பூனைகள் என்று அழைக்கிறார்கள். விலங்குகள், மனிதர்களில்கூட இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

சாம்பல் பாதி; கறுப்பு பாதி!

வ்வளவு கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் கூடச் செலுத்தாமல், கடனை மறைய வைப்பதாகச் சொல்கிறார் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆன்மிக குரு. ஸ்விஸின்டோ வேர்ல்ட் டிரஸ்ட் இன்டர்நேஷனல் ஆர்பிட் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடனில் மூழ்கியிருக்கிறார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்களின் அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஒரு மேஜிக் நிகழ்ந்து, தங்கள் கடன் கரைந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடன்களை மாயமாக மறைய வைப்பதாகச் சொல்கிறார் பபாக் சோகிஹார்டோனோடோனேகோரோ. இப்படிச் சொல்கிறவர்களை நம்ப முடியாது என்றாலும் கடனில் அல்லல்படுகிறவர்கள் இவரை நம்பத் தயாராக இருக்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் இவரது அமைப்புக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவரைக் கடவுள் போல் அவர்கள் நம்புகிறார்கள்.

“எனக்குப் பத்தாயிரம் டாலர் கடன் இருந்தது. ஆனால் ஸ்விஸின்டோவில் சேர்ந்த பிறகு என்னுடைய பிரச்சினைகள் காணாமல் போயின. எனக்கு ஒரு ரசீது வழங்கப்பட்டது. நான் வாங்கிய நிதி நிறுவனத்துக்குச் சென்று, ரசீதைக் காட்டி என்னுடைய ஆவணங்களைக் கேட்டேன். நான் கடன் வாங்கியதற்கான எந்தவித ஆதாரமும் அங்கே இல்லை. என்னுடைய பிறப்புச் சான்றிதழ் மட்டும் இருப்பதாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். ஆரம்பத்தில் நான் குருவை நம்பவில்லை. ஆனால் என் கடன் மறைந்தபோது இந்த அமைப்பு மீதும் குரு மீது அசாத்தியமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது” என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிமாரி டெட்டர்.

இந்தோனேஷிய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த அமைப்பு மீது கடுங்கோபத்தில் இருக்கின்றன. தினமும் ஏராளமானவர்கள் ரசீதுகளை வைத்துக்கொண்டு, தங்கள் கடன் மறைந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். தங்கத்தையும் பிளாட்டினத்தையும் ஏராளமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் குரு. அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும் அரசாங்கத்திடமிருந்து தப்பிக்கவும் இதுபோன்று சிறு கடன்களை அடைத்து, மறைய வைப்பதாக நாடகம் ஆடுகிறார் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். நிதி மோசடிகளைக் கவனிக்கும் இந்தோனேசிய நிறுவனம், இவரை மோசடிப் பேர்வழி என்று கூறியிருக்கிறது.

“அரசாங்கம் தவறு செய்கிறது. நான் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்யவில்லை. என்னை நம்புகிறவர்களின் கடன் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறேன். எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் குரு பபாக்.

இந்திய கடனை இவரால் மறைய வைக்க முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x