Published : 21 Feb 2018 07:39 AM
Last Updated : 21 Feb 2018 07:39 AM

உலக மசாலா: மூழ்கிய படகு.. மூழ்காத லட்சியம்

மெரிக்காவைச் சேர்ந்த டான்னர் ப்ராட்வெல், நிக்கி வால்ஷ் இருவருக்கும் சாகசப் பயணங்களின் மீது தீராத ஆர்வம். அதிலும் இருவர் மட்டுமே பாய்மரப் படகில் சென்று உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். அதற்காகச் சேமிக்க ஆரம்பித்தனர். போதுமான பணம் சேர்ந்தவுடன், தங்களது பயணத் திட்டத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண்டு பயணம் என்பதால் வீட்டை விற்றார்கள். 3.3 லட்சம் ரூபாயில் 49 வருட பழைய பாய்மரப் படகு ஒன்றை வாங்கினார்கள். மேலும் செலவு செய்து, படகைத் தயார் செய்தார்கள். இருவருக்கும் கடல் பயணம் குறித்த அனுபவம் இல்லாததால், டான்னரின் அப்பா ஒரு சிறிய பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இருவரும் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பினார்கள். வேலையை விட்டார்கள். இருக்கும் பொருட்களை விற்று, பணத்தை எடுத்துக் கொண்டார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் உலகப் பயணம் செல்லும் திட்டத்தைத் தெரிவித்தார்கள். கடந்த 6-ந் தேதி சாகசப் பயணத்தை ஆரம்பித்தார்கள். நண்பர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தனர்.

முதல் நாள் மகிழ்ச்சியாகவும் சுவாரசியமாகவும் பயணம் அமைந்தது. இரண்டாவது நாள் மாலை வரை அந்த மகிழ்ச்சி நீடித்தது. இரவு 8.45 மணிக்கு அருகில் இருந்த கரைப் பகுதியில் ஒதுங்கலாம் என்று படகைத் திருப்பினார்கள். ஆனால் படகு எதிலோ மாட்டிக்கொண்டு, திரும்ப மறுத்தது. டான்னர் சட்டென்று படகின் அடிப்பகுதிக்குச் சென்று பிரச்சினையை அறிய முயன்றார். படகுக்குள் தண்ணீர் புகுந்து, இவர்கள் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் மிதந்துகொண்டிருந்தன. நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த டான்னர், உடனே கடற்படையைத் தொடர்புகொண்டார். 40 நிமிடங்களில் அவர்கள் இருக்கும் பகுதிக்கு மீட்புக் குழுவை அனுப்பி வைப்பதாகச் சொன்னார்கள். உடனே கொஞ்சம் பணம், துணிகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, உயிர்காக்கும் சிறிய படகில் இருவரும் ஏறிக்கொண்டனர். மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது, பாய்மரப்படகு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. மீட்புக் குழு இருவரையும் அருகில் இருந்த நகரத்துக்குப் பத்திரமாக அழைத்துச் சென்றது. அங்கே விடுதியில் தங்கியிருந்தனர்.

“எங்கள் லட்சியமே மூழ்கிவிட்டதாகத் தோன்றியது. பணத்தை இழந்துவிட்டோம். வேலையை விட்டுவிட்டோம். எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. இருவருக்கும் உறக்கமே வரவில்லை. மறுநாள் காலை டான்னரின் அம்மா வந்து சேர்ந்தார். விஷயம் அறிந்த உள்ளூர் மனிதர்கள் உதவிக்கு வந்தனர். எதிர்காலம் குறித்த நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. கையில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. புதுப் பாய்மரப் படகு வாங்க வேண்டும் என்றால் 6.4 லட்சம் ரூபாய் தேவைப்படும். எல்லோரும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றார்கள். நாங்கள் ஒருபோதும் எங்கள் லட்சியத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. மீண்டும் பணம் சேர்த்துக்கொண்டு, கடல் பயணம் குறித்த விஷயங்களைத் தெளிவாக அறிந்துகொண்டு நிச்சயம் ஒருநாள் பயணிப்போம்” என்கிறார் நிக்கி. இவர்களின் லட்சியப் பயணம் நிறைவேற வேண்டும் என்பதற்காகப் பலரும் உதவ முன்வந்திருக்கிறார்கள்.

படகு மூழ்கினாலும் லட்சியம் மூழ்கவில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x