Published : 18 Feb 2018 02:34 AM
Last Updated : 18 Feb 2018 02:34 AM

அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்ற அல்-காய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை: வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்ற அல்-காய்தா தீவிரவாதிக்கு வாஷிங்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அல்-காய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆதம் ஹாரூண். நைஜீரியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது குண்டுவீசியது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியிலிருந்த அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டன. இந்த வழக்குகளை வாஷிங்டனிலுள்ள அமெரிக்க நீதிமன்றம் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதுகுறித்து நியூயார்க் நகர காவல்துறை ஆணையர் பி ஓ நீல் கூறும்போது, “சர்வதேச தீவிரவாதி பின்லேடனின் அல்-காய்தா அமைப்பில் ஒருவராக ஹாரூண் இருந்தார். 2011 செப்டம்பர் தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் அவர் அல்-காய்தாவில் சேர்ந்தார். தற்போது அவர் மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அரசு உதவி அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் ஓ காலகன் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் அல் காய்தா அமைப்பில் ஹாரூண் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் அங்குள்ள அமெரிக்க ராணுவப் படையினர் மீது ஹாரூண் தாக்குதல் நடத்தினார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

47 வயதாகும் ஹாரூண், வெள்ளை ரோஜா என்று அழைக்கப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு தாக்குதலுக்குப் பின்னர் அவர் பாகிஸ்தான் வந்து பின்லேடனின் உதவியாளர் அப்துல் ஹாதி அல்-இராக்கி என்பவரின் கீழ் பணியாற்றினார். 2003-ல்தான் அவர் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்த ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்.

இவ்வாறு ஜேம்ஸ் ஓ காலகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x