Published : 18 Feb 2018 02:32 AM
Last Updated : 18 Feb 2018 02:32 AM

உலக மசாலா: விடாமல் துரத்தும் பீட்சா

ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞர் குய்டோ க்ரோல், சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். யாரோ ஒருவர் இவரது அலுவலகத்துக்கு தொடர்ந்து பீட்சாக்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்பதுதான் புகார். கடந்த இரண்டரை வாரங்களாக 100-க்கும் மேற்பட்ட பீட்சாக்களை இவர் பெற்றிருக்கிறார். இவற்றில் ஒரு பீட்சா கூட இவர் ஆர்டர் செய்யவில்லை. “இரவு பகல் என்று பார்க்காமல் யாரோ எனக்கு பீட்சாக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆர்டர் செய்த பீட்சா வந்துகொண்டிருக்கிறது என்று தொடர்ந்து எனக்கு இமெயில்களும் குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. எங்கள் தெருவில் பீட்சா கொடுக்கவரும் நபர்கள் பெரும்பாலும் என்னுடைய அலுவலகத்துக்கு மட்டுமே வருகிறார்கள். யார் இப்படிச் செய்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வாதாடி ஜெயிக்காத என்னுடைய கட்சிக்காரர்கள் யாராவது கோபத்தில் இப்படிச் செய்கிறார்களா, அல்லது எனக்கு வேண்டப்படாதவர்கள் இப்படிச் செய்கிறார்களா என்று தெரியாமல் நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஒருநாள் காலை 27 நிமிடங்களுக்குள் 15 பீட்சாக்கள் வந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்னுடைய கம்ப்யூட்டரில் ஏதாவது வைரஸ் வந்து தானாக பீட்சா ஆர்டர் செய்கிறதா என்று கூடப் பார்த்துவிட்டேன். அப்படி ஒன்றும் இல்லை. பீட்சா டெலிவரி இமெயில்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் பயந்து, விடுமுறை நாட்களில் போனைத் தொடுவதே இல்லை. வேறு வழியின்றி புகார் அளித்திருக்கிறேன்” என்கிறார் குய்டோ க்ரோல். ஜெர்மன் சட்டப்படி இப்படி யார் என்று தெரியாமல் உணவையோ, பொருட்களையோ அவர்கள் விருப்பமின்றி அனுப்பி வைப்பது குற்றம். குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

சாப்பாட்டால் அடிப்பதுன்னு சொல்றாங்களே, அது இதுதானோ!

மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரின் மரியானோ ஜிம்னெஸ் தெருவில் வைக்கப்பட்டிருக்கிற ஒரு விளம்பரம் எல்லோரையும் பேச வைத்திருக்கிறது. அந்த விளம்பரப் பலகையில் தொப்பி அணிந்த மனிதரின் படமும் அவரது முழு பெயரும் இருக்கின்றன. ‘நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் என் தொடர்பை துண்டித்துக்கொண்டாய். போன் செய்தால் எடுப்பதில்லை. இமெயில்களுக்கு பதில் அனுப்புவதில்லை. ஃபேஸ்புக்கில் கூட என்னை உன் நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிட்டாய். மருத்துவப் பரிசோதனையில் என் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. உன்னை நான் அவசியம் சந்திக்க வேண்டும். உன்னை எனக்கு அறிமுகம் செய்த நண்பரின் பார்வைக்கு இந்த விஷயம் சென்றால், உன்னைப் பிடிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு வாரங்களாக இந்த விளம்பரப் பலகையைப் பார்ப்பவர்களில் சிலர் சிரிக்கிறார்கள். பலர் அந்தப் பெண்ணுக்காக வருத்தப்படுகிறார்கள். இன்னும் சிலர் இதைப் படம் எடுத்து, சமூகவலைத்தளங்களில் போட்டு விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். கார்லோஸ் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டாரா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

ஏமாற்றுபவர்களுக்கு ஒரு பாடம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x