Published : 17 Feb 2018 08:06 AM
Last Updated : 17 Feb 2018 08:06 AM

உலக மசாலா: சிறையிலிருந்து தப்பிக்க கூடு விட்டு கூடு பாய்ந்த கைதி

பெ

ரு நாட்டைச் சேர்ந்த 28 வயது அலெக்சாண்டர் ஜெஃபர்சன், பாலியல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றவர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரைப் பார்ப்பதற்காக இரட்டையரில் இன்னொருவரான ஜியான்கார்லோ சிறைச்சாலைக்கு வந்தார். கைதிகள் சந்திக்கக்கூடிய பொது வான அறையில் சகோதரர்கள் இருவரும் சந்தித்தனர். உணவு, நண்பர்களின் கடிதங்கள் போன்றவற்றை ஒப்படைத்தார். அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், ஜியான்கார்லோவைத் தன் அறைக்கு யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றார் அலெக்சாண்டர். அங்கே அறை நண்பர் ஏற்கெனவே திட்டமிட்டபடி குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து வைத்திருந்தார். விஷயம் அறியாத ஜியான்கார்லோவும் பானத்தைப் பருகினார். சட்டென்று மயக்கமடைந்தார்.

உடனே அவரது உடைகளைக் கழற்றித் தான் அணிந்துகொண்டு, தன்னுடைய உடைகளை அவருக்கு அணிவித்தார் அலெக்சாண்டர். அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஏற்கெனவே அன்று காலை செயல் இழக்கச் செய்திருந்தார். அதனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை. வேகமாகச் சிறையிலிருந்து வெளியேறிவிட்டார்.

மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த ஜியான்கார்லோ அதிர்ச்சியடைந்தார். தன் சகோதரனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனே சிறை அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொன்னார். இருவரும் உருவத்தில் ஒரே மாதிரி இருந்ததால், யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தான் நிரபராதி என்றும் தன்னுடைய அடையாளங்களைப் பரிசோதிக்கும்படியும் கூறிக்கொண்டே இருந்தார்.

அதிகாரிகளும் ஒருகட்டத்தில் இவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு, பரிசோதிக்க முடிவெடுத்தனர். அதில் அலெக்சாண்டரின் விரல் ரேகை இருந்த ஃபைல் மட்டும் காணாமல் போயிருந்தது. ஜியான்கார்லோ தான் நிரபராதி என்று நிரூபிக்க இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோனதில் உடைந்துபோனார். அதிகாரிகள் விரல் ரேகை தவிர்த்து சில அடையாளங்களை வைத்து, இவர் அலெக்சாண்டர் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் குற்ற வாளி தப்பிக்க உதவிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பிச் சென்றபோது காவலில் இருந்த 6 காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். காவல்துறை மிகத் தீவிரமாக அலெக்சாண்டரைத் தேட ஆரம்பித்தது. ஓராண்டுக்குப் பிறகு கடந்த வாரம் கைது செய்திருக்கிறது. ஏற்கெனவே 12 ஆண்டுகள் கிடைத்த தண்டனையுடன் தப்பிச் சென்ற குற்றத்துக்காக மேலும் 4 ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 16 ஆண்டுகள் சிறைக்குள் இருக்க வேண்டும் அலெக்சாண்டர்.

“கடுமைக்கும் பாதுகாப்புக்கும் பெயர் பெற்ற எங்கள் சிறைச் சாலையில் இருந்து ஒரு கைதி எளிதாக வெளியேறியது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது” என்கிறார் சிறை அதிகாரி ஒருவர்.

”அலெக்சாண்டரால் நான் அநியாயமாக ஓராண்டு சிறைக்குள் இருந்தாலும் அவன் மீது எனக்கு இன்னும் அன்பு இருக்கிறது. தவறு செய்யாத என்னைச் சிறைக்குள் தள்ளி, தப்பித்த அவனிடம் இது குறித்துப் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்” என்கிறார் வெளியே வந்திருக்கும் ஜியான்கார்லோ.

தமிழ் சினிமா பார்க்கிற மாதிரியே இருக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x