Published : 10 Feb 2018 07:49 AM
Last Updated : 10 Feb 2018 07:49 AM

உலக மசாலா: பெண்களுக்கான தனி தீவு!

பி

ன்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கு என்று பிரத்யேகமான சுற்றுலா விடுதி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோத் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார். “ஆண்களின் தொந்தரவு இன்றி, தனியாக சில நாட்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே இந்த விடுதியை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. இது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்கள் சுதந்திரமாக இருப்பதற்கான விடுதி. ‘சூப்பர்ஷி’ தீவு 8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. நான் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலிக்கிறேன். அவர்தான் இந்தத் தீவு விலைக்கு வருவதாகச் சொன்னார். ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. தீவைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உடனே விலைக்கு வாங்கினேன். விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள் போன்றவற்றை உருவாக்கினேன். ஆரோக்கியமான உணவுக்கும் ஏற்பாடு செய்தேன். ‘பெண்கள் இங்கே வந்து தங்கினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். உங்களுக்காகவே ஆண்டு முழுவதும் சூப்பர்ஷி தீவு காத்திருக்கும்’ என்று விளம்பரம் செய்தேன். தற்போது என் தோழிகள், உறவினர்கள், தெரிந்தவர்களே வந்து செல்கிறார்கள். ஜூலை மாதம்முதல் முறையாக ஆரம்பிக்க இருக்கிறோம்” என்கிறார் கிறிஸ்டினா ரோத்.

பால் பேதம் உடையணும்னு சொல்ற நேரத்தில் இது தேவையா!

பெ

லென் அல்டிகோசியா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஃப்ளோரிடாவில் உள்ள வீட்டுக்குச் செல்ல விமானப் பயணச் சீட்டு வாங்கினார். அப்போதே தான் வளர்க்கும் வெள்ளெலியை விமானத்தில் அழைத்துச் செல்லலாமா என்று கேட்டார். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் விமானத்தில் ஏறியதும் வெள்ளெலியை அனுமதிக்க விமான ஊழியர்கள் மறுத்தனர். “நான் அனுமதி பெற்றுதான் விமானத்துக்குள் அழைத்து வந்தேன். என் செல்லப்பிராணியின் ஆரோக்கியம் குறித்து மருத்துவர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அதனால் பிறருக்கு வெள்ளெலியால் ஆபத்து இல்லை என்றேன். எதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எங்காவது ஓரத்தில் வைத்துக்கொள்கிறேன் என்றதையும் ஏற்கவில்லை. கழிவறையில் வெள்ளெலியைப் போட்டு, கொன்றுவிடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் செல்லப்பிராணியை எங்கோ தனியாக விட்டுச் செல்வதற்குப் பதில், நானே கழிவறையில் போட்டுவிட்டு, 10 நிமிடங்கள் அழுது தீர்த்தேன். இந்த வலியைத் தாங்க முடியவில்லை. ஏற்கெனவே இரு முறை நான் விமானத்தில் வெள்ளெலியை அழைத்து வந்திருக்கிறேன். இந்த முறை அவர்களிடம் அனுமதி பெற்றுதான் விமானத்தில் ஏறினேன். அதனால் தவறு ஸ்பிரிட் விமான நிறுவனம் மீதுதான். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்திருக்கிறேன்” என்கிறார் பெலேன். “வெள்ளெலிக்கு மாற்று ஏற்பாடு செய்யச் சொன்னோம். அடுத்த விமானத்தில் கூட பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறினோம். ஆனால் அவசரமாக அவர் செல்ல வேண்டும் என்பதால் இந்த விமானத்தில் ஏறிவிட்டார். சட்டதிட்டங்களின்படிதான் நாங்கள் நடந்துகொள்ள முடியும்” என்கிறார் விமானத்தை ஊழியர்.

பாவம், அந்த வெள்ளெலி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x