Published : 09 Feb 2018 08:15 AM
Last Updated : 09 Feb 2018 08:15 AM

உலக மசாலா: 19 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்த மூவர்

டந்த 1980-ம் ஆண்டு ராபர்ட் ஷஃப்ரான் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்முறையாக நுழைந்தார். அங்கே அவர் எதிர்பார்க்காத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இதுவரை சந்திக்காதவர்கள் அன்புடன் வரவேற்றார்கள், வாழ்த்தினார்கள், கட்டிப் பிடித்தார்கள். ராபர்ட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பலரும் ‘ஈடி’ என்று அழைத்தார்கள். மிகவும் குழப்பத்துடன் தன் அறை நண்பர் மைக்கேலை சந்தித்தார். அன்று நடந்த விஷயங்களைக் கூறினார். மைக்கேலின் கடந்த ஆண்டு அறையில் தங்கியிருந்தவர்தான் ஈடி காலண்ட். ராபர்ட்டுக்கும் ஈடிக்கும் அப்படி ஓர் உருவ ஒற்றுமை! இருவரும் ஒரே மாதிரி பேசினார்கள், சிரித்தார்கள், நடந்தார்கள். தன் பழைய அறை நண்பரும் புது அறை நண்பரும் ஒரே நாளில் பிறந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த மைக்கேலுக்கு, இருவரும் இரட்டையர்களாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். மிகவும் ஆச்சரியமடைந்தனர். 1961-ம் ஆண்டு ஜூலை 12 அன்று இருவரும் ஒரு தாய்க்குப் பிறந்திருக்கிறார்கள். பிறகு 2 வெவ்வேறு குடும்பத்தினரிடம் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தது. சில நாட்களில் டேவிட் கெல்மன் என்பவர் இரட்டையர்களைத் தொடர்புகொண்டார். அவர்களை நேரில் சந்தித்தபோது, அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. டேவிட்டும் இந்த இரட்டையர்களைப் போலவே இருந்தார், நடந்தார். பேசினார். அப்போதுதான் இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் என்பது தெரியவந்தது. மூவரும் ஒரே விதமான உணவுகளைத்தான் விரும்பினார்கள்.

மூவரும் தாங்கள் பிரிந்த காரணத்தை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். அப்போதுதான் நயவஞ்சகமாகத் தாங்கள் பிரிக்கப்பட்டதை அறிந்தனர். மனநல மருத்துவர் நியுபார், இரட்டையர்களைப் பிரித்து, அவர்களின் மனநிலையை ஆராய்ச்சி செய்ய இந்தக் காரியங்களைச் செய்திருந்தார். ‘இயற்கையாக வளர்வதற்கும் வளர்த்தெடுப்பதற்கும்’ உள்ள வித்தியாசங்களை அறிவதற்கே இந்த ஆராய்ச்சி. 12-க்கும் மேற்பட்ட இரட்டையர்களைப் பிரித்திருக்கிறார். மருத்துவரும் தத்து கொடுத்த நிறுவனமும் தத்தெடுத்த பெற்றோர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கவே இல்லை. அவர்களை அறியாமல் மருத்துவரின் குழு அவர்களைக் கண்காணித்து வந்தது. ஆண்டுக்கு ஒருமுறை இந்தக் குடும்பங்களை ஒன்றிணைத்தனர். அப்போது குழந்தைகளிடம் தனித்தனியாகப் பேட்டி எடுத்து, படம் பிடித்து, ஆவணப்படுத்தினர். அந்த ஆவணப்படத்தில் டேவிட்டின் வளர்ப்பு அம்மா, “குழந்தை தூங்கி எழும்போது ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்று சொல்வான். இவனது கற்பனை சகோதரன் குறித்து நாங்கள் அடிக்கடிப் பேசியது உண்டு. பிற்காலத்தில் தன் சகோதரனை நினைத்து இவன் மன அழுத்தத்துக்குச் சென்றான்” என்கிறார்.

ராபர்ட், டேவிட், ஈடி மூவரின் வளர்ப்புப் பெற்றோரும் இந்த விஷயம் அறிந்து கோபப்பட்டனர். மருத்துவர் நியுபரையும் அவரது குழுவினரையும் இந்தக் கொடூரமான பரிசோதனைக்காகச் சட்டத்தின் மூலம் தண்டிக்க இயலவில்லை. மருத்துவரோ, அவரது ஆராய்ச்சிக் குழுவினரோ எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை, இழப்பீடும் வழங்கவில்லை. தற்போது மருத்துவர் உயிருடனும் இல்லை.

ஐயோ… எவ்வளவு கொடூரமான ஆராய்ச்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x