Published : 06 Feb 2018 08:38 AM
Last Updated : 06 Feb 2018 08:38 AM

உலக மசாலா: 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நாய் மீட்பு...

ங்கிலாந்தைச் சேர்ந்த 51 வயது ரால்ப் பல்கர், 4 வயது மகளுடன் கல்லறைக்குச் சென்றார். மூத்த மகன் ஜேம்ஸ், 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற விஷயத்தை முதல்முறை மகளிடம் சொல்லும் படம், பார்ப்பவர்களின் மனதை உலுக்கிவிட்டது. “25 ஆண்டுகளுக்கு முன் எங்கள் அன்பு மகன் 2 வயது ஜேம்ஸ் கொடூரமாகக் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றவர்கள் 10 வயது சிறுவர்கள். அன்று ஷாப்பிங் மாலில் என் மனைவி பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று ஜேம்ஸ் காணாமல் போனான். மாலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் 2 சிறுவர்கள் ஜேம்ஸை அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் தெளிவின்றி காணப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாலில் இருந்து இரண்டரை மைல் தொலைவில் இருந்த ரயில் தண்டவாளத்திலிருந்து உயிரற்ற ஜேம்ஸை கண்டுபிடித்தார்கள். தலையில் இரும்புக் கம்பியால் அடித்த காயங்கள்.

அன்பைத் தவிர வேறு எதுவும் அறியாத ஜேம்ஸை, இப்படிக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? காவல் துறை விசாரணையில் ஜான் வெனபில்ஸ், ராபர்ட் தாம்சன் என்ற 10 வயது சிறுவர்கள் ஜேம்ஸைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்களால் எப்படி இவ்வளவு கொடூரமான வன்முறையைச் செய்ய முடிந்தது? இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகவும் இளைய குற்றவாளிகள் என்ற பெயர் அவர்களுக்குக் கிடைத்தது. குற்றவாளிகள் இருவருக்கும் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை முடிந்து வெளிவந்த ஜான் வெனாபில்ஸ், மீண்டும் குழந்தைகள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 2010 மற்றும் 2017-ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜேம்ஸுக்குப் பிறகு நானும் மனைவியும் உடைந்து போனோம். ஒருகட்டத்தில் பிரிந்துவிட்டோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துகொண்டேன். என் மகள் நான் இழந்த சந்தோஷங்களை மீட்டுத் தந்திருக்கிறாள். அவளுடைய அண்ணன் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். 4 வயதாகிவிட்டதாலும் ஜேம்ஸ் மறைந்து இது 25-வது ஆண்டு என்பதாலும் முதல்முறையாகக் கல்லறைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவன் எவ்வாறு இறந்தான் என்பதைச் சொல்லவில்லை” என்கிறார் ரால்ப் பல்கர்.

புத்திர சோகம் கொடுமையானது…

மெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த டெப்ரா வளர்த்த நாய், 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. நாயைத் தேடி அலைந்தார். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தார். ஆனால் நாய் கிடைக்கவே இல்லை. தற்போது விலங்குகள் பாதுகாப்பு மையத்திலிருந்து நாய் உயிருடன் இருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. நாயை ஸ்கேன் செய்தபோது, மைக்ரோசிப்பில் இருந்த தகவல்களை வைத்து, தொடர்புகொண்டிருக்கிறார்கள். நாயை வரவேற்கத் தயாராக இருக்கிறது டெப்ரா குடும்பம்.

தொலைந்தது கிடைத்தால் மகிழ்ச்சிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x