Published : 31 Jan 2018 10:01 AM
Last Updated : 31 Jan 2018 10:01 AM

உலக மசாலா: 23 வயது இளைஞரை மணந்த 38 வயது பெண்!

சீ

னாவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மணமகளுக்கு 38 வயது, மணமகனுக்கு 23 வயது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். 15 வயது இளையவரைத் திருமணம் செய்துகொண்ட இந்தப் பெண்ணுக்கு, முதல் திருமணத்தின் மூலம் 14 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. ஜனவரி 10 அன்று, ஹைனான் பகுதியில் மிகவும் ஆடம்பரமாக இந்தத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார் மணமகள். இவர் மீது காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் இளைஞர். வயது வித்தியாசத்தை நினைத்து முதலில் மறுத்தவர், ஒருகட்டத்தில் இளைஞரின் காதலை ஏற்றுக்கொண்டார். இவர்களது திருமணத்துக்கு இளைஞரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்குள் மணமகள் கர்ப்பமாகிவிட்டார். அதனால் உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. உடனே 66 லட்சம் ரூபாய் ரொக்கமும் ஏராளமான நிலங்களும் ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரும் வீடுகளும் வரதட்சணையாகக் கொடுப்பதாகச் சொன்னார் மணமகள். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கிடைத்தவுடன் மணமகனின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார்கள். அவர்களின் ஆசியுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. மணமக்கள் இருவரும் அன்புடனும் காதலுடனும் காணப்பட்டனர். இந்தத் திருமணம் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

“இதுவே விவாகரத்து பெற்ற 38 வயது ஆண், 23 வயது பெண்ணை மணந்திருந்தால் அதை இந்தச் சமூகம் சாதாரணமாகக் கடந்துபோயிருக்கும். அதுவே வயதான பெண், தன்னை விட இளையவரை மணந்தால் பெரிய குற்றமாகக் கருதுகிறது. இது சமூகத்தில் நிலவும் ஆண்-பெண் சமத்துவமின்மையின் விளைவு. பணத்தைக் காட்டி அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ளவில்லை. இளைஞரின் பெற்றோர் ஒப்புக்கொள்ளாததாலே வரதட்சணை கொடுத்து, திருமணம் செய்திருக்கிறார். சக்தி வாய்ந்த தொழிலதிபராக ஒரு பெண் இருந்தாலும் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவரை எதிர்மறையானவராகவே சித்தரிக்கிறது” என்கிறார்கள் சீன சமூக ஆர்வலர்கள்.

காதலுக்கு வயது தடையில்லை!

வா

ஷிங்டனில் டெலிவரி நிறுவனத்திலிருந்து கொண்டு வந்த 3 பார்சல்களை வைத்துவிட்டுச் சென்றார் ஓர் ஊழியர். அவரது கார் அகன்றதும் வேகமாக ஒரு கார் வந்தது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி, 3 பார்சல்களையும் திருடிக் கொண்டு வேகமாக ஓடினார். எதிர்பாராமல் தோட்டத்தில் இருந்த பள்ளத்தில் தடுக்கி விழுந்தார். சுதாரித்து பார்சல்களை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது மீண்டும் விழுந்துவிட்டார். இந்த முறை பலமான அடி. அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவருடன் வந்தவர் அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு, காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். இந்தக் காட்சிகள் எல்லாம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகிவிட்டன. காவலர்களிடமும் மாட்டிக்கொண்டார் அந்தப் பெண்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x