Published : 30 Jan 2018 10:27 AM
Last Updated : 30 Jan 2018 10:27 AM

உலக மசாலா: ரூ.1 கோடிக்கு சொந்த வீடு வாங்கிய 20 வயது பெண்

ங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி க்ராகார்ட் 20 வயதிலேயே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கியிருக்கிறார். “16 வயதில் பள்ளியில் படிக்கும்போதே சொந்தமாக சம்பாதிக்க முடிவு செய்தேன். சாக்லெட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி, உணவு இடைவேளைகளில் விற்பனை செய்தேன். இதன்மூலம் மாதம் 3,600 ரூபாய் சம்பாதித்தேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் சென்றுவிட்டேன். 5 பகுதி நேர வேலைகளில் சேர்ந்தேன். இவற்றின் மூலம் கிடைத்த 45 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் சேமிக்க ஆரம்பித்தேன். பிசினஸ் தொடர்பான படிப்பிலும் சேர்ந்தேன். நான் எளிமையான உடைகளைத்தான் அணிவேன். வெளியே சாப்பிட மாட்டேன். நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்ல மாட்டேன். மூன்றே ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் ரூபாயைச் சேமித்துவிட்டேன். நகரை விட்டுச் சற்று தொலைவில் இருந்த இரண்டு படுக்கையறை வீடு, ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்ததை அறிந்தேன். வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவதற்கான முன்பணம் என்னிடம் இருந்ததால், உடனே கடன் கிடைத்தது. வீட்டை வாங்கி, நான் விரும்பியபடி புதுப்பித்தேன். 21-வது வயதில் என் சொந்த வீட்டில் குடியேறிவிட்டேன். என் வாழ்க்கையில் இந்தத் தருணம் அற்புதமானது. என் பெற்றோர் எப்போதும் எனக்கு அதிகமான பணத்தைக் கொடுத்ததே இல்லை. நீ சம்பாதித்து, உன் விருப்பப்படி வாழ்ந்துகொள் என்றுதான் சொல்வார்கள். இன்று அவர்கள் சொன்னது போலவே வீட்டை வாங்கிவிட்டேன்” என்கிறார் ஜென்னி! இவர் தற்போது வேலை செய்துவரும் நிறுவனத்தில், அனைவரும் ஜென்னியின் திறமையைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் ஜென்னி!

மெரிக்காவைச் சேர்ந்த கிங் ஜான்சன் என்ற சிறுவன், பள்ளி இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். “இன்று மிக மோசமான நாள். அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்? என்ற பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று கூறினார். இந்த பதிலைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஐரோப்பியரான கொலம்பஸ் வருவதற்கு முன்பே, இங்கே பூர்வகுடி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் இவருக்கு முன்பே பலர் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள் என்றும் என் அம்மா சொல்லியிருக்கிறார். அதனால் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று ஆசிரியர் சொல்வது பொய். எங்களுக்குத் தெரிந்த ஒரே கொலம்பஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞரான கிறிஸ்டோபர் ஜார்ஜ் வாலஸ்தான். எனக்கு கொலம்பஸ் தினத்துக்கு விடுமுறை கிடைப்பதில் மகிழ்ச்சிதான். ஆனால் பொய்யான விஷயத்தை எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். இன்னொரு கேள்வியும் தோன்றுகிறது. அமெரிக்கர்களால் எப்படி ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாற்றை போதிக்க முடியும்?” என்ற கேள்வியோடு முடித்திருக்கிறான் கிங் ஜார்ஜ். பலரும் இவனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி வருகிறார்கள்.

அது சரி, கண்டுபிடித்த அமெரிகோ வெஸ்புகியின் பெயரையே நாட்டின் பெயராக வைத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு ஏன் இந்தக் குழப்பம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x