Published : 27 Jan 2018 09:57 AM
Last Updated : 27 Jan 2018 09:57 AM

உலக மசாலா: குளிர்பானத்துக்கு அடிமையாகி பற்களை இழந்தவர்

யர்லாந்தைச் சேர்ந்த 32 வயது மைக்கேல் ஷெரிடனுக்கு பற்கள் முழுவதும் அரித்து, வாய் அழுக ஆரம்பித்துவிட்டது. அளவுக்கு அதிகமாகக் குளிர்பானங்களைக் குடித்ததால் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டார். மூன்று குழந்தைகளின் தந்தையான மைக்கேலுக்கு குளிர்பானங்கள் என்றால் உயிர். தினமும் 6 லிட்டர் வரை குடித்துக் கொண்டிருந்தார். இந்தப் பழக்கத்துக்கு அடிமையானதால், அரை மணி நேரம் குளிர்பானங்களைக் குடிக்காவிட்டால் தலைவலி, நடுக்கம் போன்றவை ஏற்பட ஆரம்பித்தன. இதனால் இவரே வேண்டாம் என்று நினைத்தாலும்விட முடியாமல் போய்விட்டது. ஆசைக்காகக் குடித்தவர், பிறகு தலைவலிக்குப் பயந்து குடிக்க ஆரம்பித்தார். இதனால் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தன. ஒரு சாண்ட்விச் கூட சாப்பிட முடியாத அளவுக்குப் பல் வலித்தது. சூடாக எதுவும் குடிக்க முடியாமல் போனது. உடல் நலம் கெட்டது. பற்கள் அரிக்கப்பட்டதால் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பேசுவதையும் சிரிப்பதையும் தவிர்த்து வந்தார்.

“யாரிடமும் பேசுவதற்கு வெட்கமாக இருந்தது. பற்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசவும் சிரிக்கவும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய பேச்சு யாருக்கும் புரியாமல் போனது. கிறிஸ்துமஸ் அன்று என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்தபடி ஒளிப்படம் எடுத்தார்கள். நான் மட்டும் வாயைத் திறக்காமல் சோகமாக நின்றேன். ஒரு குளிர்பானம் என்னை இவ்வளவு மோசமாக அடிமைப்படுத்தும் என்றோ, என் பற்களைச் சிதைக்கும் என்றோ நான் அறிந்திருக்கவில்லை. எல்லோரும் தூங்கி எழுந்தவுடன் காபி குடிப்பதுபோல, நான் குளிர்பானம் குடித்து வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு விபரீதம் புரிய ஆரம்பித்தது. மதுவைவிட இது மோசமான பழக்கம் என்று உணர்ந்தேன். வேலையில் அரை மணி நேரம் குளிர்பானம் குடிக்க மறந்தாலும் உடல் வியர்க்கும், தலை வலிக்கும், கைகள் நடுங்கும். மருத்துவரிடம் செல்ல எனக்குக் கூச்சமாக இருந்தது. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் வயதில் நான் இப்படி ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை எண்ணி வெட்கப்பட்டேன். அதனால் மருத்துவரிடம் செல்லாமல் சமாளித்து வந்தேன். கடந்த நவம்பர் மாதம் ஒரு விளையாட்டைக் காணச் சென்றிருந்தேன். அப்போது மிகவும் சிரமப்பட்டு சாப்பிடுவதைப் பார்த்து, பல் மருத்துவர் முரனாஹன் விசாரித்தார். அவரிடம் உண்மையைச் சொன்னேன். அவரது மருத்துவமனைக்கு வரச் சொன்னார். என் நிலையைக் கண்டதும் அதிர்ந்துவிட்டார். இதுவரை அரைகுறையாக இருந்த 27 பற்களை எடுத்திருக்கிறார். மீதிப் பற்களையும் எடுத்து, முழுமையாகச் சிகிச்சையளித்து, புதுப் பற்களை வைக்க வேண்டும். இதற்குச் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவாகும். நான் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு நிலை யாருக்கும் வர வேண்டாம் என்பதற்காகவே என்னைப் பற்றிய தகவல்களை வெளியே சொல்லிவிட்டேன். குளிர்பானங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்” என்கிறார் மைக்கேல்.

யாராவது இவ்வளவு தூரம் அடிமையாவார்களா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x