Published : 25 Jan 2018 10:30 AM
Last Updated : 25 Jan 2018 10:30 AM

உலக மசாலா: பெற்றால்தான் பிள்ளையா!

வட சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வசித்துவருகிறார் லியாங் க்யாயிங். 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நச்சு வாயு வெளியேறிய விபத்தில் இவரும் இவரது ஒரே மகன் லியாங் யூவும் மாட்டிக்கொண்டனர். இதில் லியாங் பிழைத்துக்கொண்டார், யூ இறந்து போனார். உயிர் பிழைத்தாலும் லியாங்கின் மூளை பாதிப்புக்கு உள்ளானது. பக்கவாதமும் ஏற்பட்டது. சில காலத்துக்குப் பிறகு மகன் பற்றிய நினைவு வந்தது.

இந்தச் சூழ்நிலையில் உண்மையைச் சொல்ல இவரது கணவர் ஸியாவுக்கு மனம் வரவில்லை. அதனால் வெகுதொலைவில் வேலை செய்வதாகச் சொல்லிவிட்டார். மகன் குறித்து அதிக விவரங்கள் கேட்கும் அளவுக்கு லியாங்கின் மனநிலை இல்லை. அதனால் எளிதாகச் சமாளித்துவந்தார் ஸியா.

2010-ம் ஆண்டு இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஷாங்காய் நகர் காவல்துறையைப் பற்றிய நிகழ்ச்சி அது. அதில் ஒரு காவல்துறை அதிகாரியின் முகத்தைக் கண்டதும் ஸியாவின் முகம் பிரகாசமானது. உடனே தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். அவரும் புன்னகை செய்துகொண்டே, ‘நம்ம லியூ’ என்று கண்ணீர் விட்டார்.

“எங்கள் மகனுக்கும் அந்த அதிகாரிக்கும் உருவத்தில் அவ்வளவு ஒற்றுமை இருந்தது. இந்த 8 ஆண்டுகளில் என் மனைவியின் மனநிலை கொஞ்சம் தேறியிருந்தது. அதனால் மகனை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு தொலைக்காட்சியில் வருபவரை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? ஆனாலும் மனைவிக்காகத் தேடிக்கொண்டு கிளம்பினேன். சுமார் 1,500 கி.மீ. பயணித்தேன். தொலைக்காட்சி நிலையத்தைத் தொடர்புகொண்டேன். ஆனால் அந்த மனிதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 2013-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரிந்திருந்தவர்களைச் சேர்க்கும் நிகழ்ச்சி என்பதால், அவர்களைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

அவர்கள் ஷாங்காய் காவல்துறையின் உதவியுடன் ஜியாங் ஜிங்விய் என்ற அதிகாரியைக் கண்டுபிடித்தார்கள். அவரைச் சந்தித்து எங்கள் துன்பக் கதையைச் சொன்னேன், பள்ளி ஆசிரியராக இருந்த என் மனைவி இன்று இருக்கும் நிலையையும் எடுத்துச் சொன்னேன். அவரது மனம் சட்டென்று இளகியது. எங்களுக்கு உதவுவதாகச் சொன்னார். எங்கள் சந்திப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஜியாங்கைப் பார்த்ததும் லியூ என்று கட்டிப் பிடித்து, கண்ணீவிட்டார் மனைவி. நானும் அதிகாரியும் மேடையில் இருந்த அனைவரும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டோம். எங்கள் மகன் போலவே அத்தனை அன்பாக நடந்துகொண்டார் அதிகாரி.

அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்றாலும் எங்களுக்கு உதவ முன்வந்தது பெரிய விஷயம். அதுவரை இரவில் தூங்காத என் மனைவி, அன்று கூடுதலாக 8 மணி நேரம் தூங்கினார். அதற்குப் பிறகு என் மனைவியின் உடலிலும் மனநிலையிலும் நல்ல முன்னேற்றம் வந்தது. அடிக்கடி மகனைப் பார்க்க வேண்டும் என்பார். அதிகாரி 5 ஆண்டுகளாக போனில் பேசுகிறார், ஸ்கைப்பில் பேசுகிறார். பரிசுப் பொருட்களை அனுப்புகிறார். நானும் அவரை எங்கள் மகனாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் ஸியா.

பெற்றால்தான் பிள்ளையா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x