Last Updated : 24 Jan, 2018 02:49 PM

 

Published : 24 Jan 2018 02:49 PM
Last Updated : 24 Jan 2018 02:49 PM

9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை

சீனாவில் 9 மணி நேரத்தில் 1500 பணியாளர்கள் சேர்ந்து ஒரு ரயில் நிலையத்தையே கட்டி முடித்து, அதில் ரயிலையும் இயக்கிக் காட்டி உள்ளனர்.

தெற்கு சீனாவின் புஜியான் மாநிலத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று சீனாவின் ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 19-ம் தேதி இரவு ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, 20-ம் தேதி காலையில் ரயில் நிலையத்தை நிர்மானித்து முடித்துவிட்டனர்.

லாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம், கான்லாங் ரயில்வே, கான்ரூலாங் ரயில்வே, ஹாங்லாங் ரயில்வே ஆகிய மிகப்பெரிய சந்திப்புகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையத்தில் போக்குவரத்து சிக்னல்கள், போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் ஆகியவற்றையும் அமைத்துள்ளனர்.

9 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் என்பது, தென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கருதப்படுகிறது.

இந்த கடினமான இலக்கை அடைந்தது குறித்து சீனா டைசீஜு பொறியியல் குழுமத்தின் துணை மேலாளர் ஹான் டோசாங் கூறுகையில், " 1500 பணியாளர்களின் வேகமான உழைப்புதான் முக்கியக் காரணம். 1500 ஊழியர்களையும் 7 பிரிவுகளாகப் பிரித்து பணியாற்றினோம்.

இந்தப் பணிக்காக 7 ரயில்கள், 23 குழிதோண்டும் ராட்சத இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. 19-ம் தேதி இரவு தொடங்கிய பணிகள், 20-ம் தேதி காலையில் முடிந்தது. ஏறக்குறைய 9 மணி நேரத்தில் லாங்காய் நகரில் ரயில் நிலையத்தை அமைத்துவிட்டோம். அதில் சோதனை முயற்சி ரயிலையும் இயக்கிவிட்டோம்.

தென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக 246 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுவருகிறது. அதில் ஒருபகுதியாக இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x