Published : 24 Jan 2018 10:28 AM
Last Updated : 24 Jan 2018 10:28 AM

உலக மசாலா: தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் போலிருக்கே!

சீனாவின் நான்சோங் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஸியாவோபிங் என்ற பெண், தன்னுடைய 27 வயது மகனைத் தான் பெற்றெடுக்கவில்லை என்றும் திருடிக்கொண்டு வந்ததாகவும் காவல் துறையிடம் சரணடைந்திருக்கிறார். 26 வருடங்களுக்குப் பிறகு ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தபோது முதலில் யாரும் நம்பவில்லை.

“எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. மிகுந்த துன்பத்தில் இருந்தேன். அடுத்தவர் குழந்தையை எடுத்து வளர்த்தால், எனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றார்கள் கிராமத்துப் பெரியவர்கள். குழந்தை வேண்டும் என்ற சிந்தனை தவிர, வேறு சிந்தனை இல்லாததால் நானும் அடுத்தவர் குழந்தையை எடுத்து வளர்க்க முடிவு செய்தேன். போலியாக ஓர் அடையாள அட்டையைத் தயார் செய்துகொண்டேன். 1992-ம் ஆண்டு ஒரு வயது குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்றே நாட்களில் குழந்தையை எடுத்துக்கொண்டு, வேறு ஒரு கிராமத்தில் குடியேறினேன். இவன் என் குழந்தை என்று எல்லோரும் நம்பிவிட்டனர். லியு ஜின்ஸிங் என்று பெயரிட்டேன். நான் பெற்ற குழந்தையாகவே அன்பைக் கொட்டி வளர்த்தேன். எங்கள் வீட்டில் மகிழ்ச்சி திரும்பியது. 1995-ம் ஆண்டு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே லியுவை அவன் பெற்றோரிடம் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் குழந்தையைத் திருடிய குற்றத்துக்காக நான் சிறைக்குச் சென்றால் என் மகளின் நிலை என்னாவது என்று பயந்தேன். அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். சில ஆண்டுகளில் என் கணவரை இழந்தேன். இரண்டு குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். ஒருநாள் தொலைக்காட்சி ஆவணப்படத்தில், வயதான பெண் தன்னுடைய தொலைந்துபோன மகனை 50 ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்தேன். அப்படியே உடைந்து போனேன். இந்தப் பெண்ணைப் போல் என் மகனின் பெற்றோரும் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். இனிமேல் நான் சிறைக்குச் செல்வது குறித்து கவலைப்படப் போவதில்லை. என் மகனிடம் உண்மையைச் சொன்னேன். அவனோ, நான் உங்கள் மகன்தான். நீங்கள் சரணடைய வேண்டாம் என்றான். என் மனம் கேட்கவில்லை. சரணடைந்துவிட்டேன். என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். லியுவை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்கிறார் ஸியாவோபிங்.

“என் அம்மா சொல்வதை நான் ஏற்கவில்லை. உண்மையிலேயே நான் தத்துப்பிள்ளை என்றாலும் கவலையில்லை. தனியாளாக என்னையும் என் தங்கையையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். சொந்த மகன் போலவே அவ்வளவு அன்பு காட்டினார். நான் ஒருநாளும் அவரது அன்பிலும் அக்கறையிலும் குறை கண்டதில்லை. என்னைப் பெற்றவர்களைத் தேட வேண்டாம். ஒருவேளை தேடிக் கண்டுபிடித்தாலும் நான் அவர்களுடன் செல்ல மாட்டேன். என் அம்மாவுக்குத் தண்டனை கிடைக்கக் கூடாது ” என்கிறார் லியு.

காவல்துறையினர் இதை எப்படி கிரிமினல் வழக்காகப் பதிவு செய்ய முடியும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். லியு பெற்றோர் வசித்த பகுதியில் குழந்தை காணவில்லை என்ற புகாரே அந்த ஆண்டில் பதிவாகவில்லை.

தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் போலிருக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x