Published : 23 Jan 2018 10:39 AM
Last Updated : 23 Jan 2018 10:39 AM

உலக மசாலா: ‘கேக்’கில் கலை வண்ணம் கண்டார்!

சீனாவைச் சேர்ந்த கேக் தயாரிப்பாளர் ஸோவ் யி, ‘சுகர் கிங்’ என்று அழைக்கப்படுகிறார். கைகளால் செய்யப்படும் இவரது கேக் அலங்காரங்களைப் பார்ப்பவர்கள் உடனடியாக இந்தப் பட்டத்தை வழங்கிவிடுவார்கள்! பளிங்கு பொம்மையைப் போல் அவ்வளவு அழகாக கேக் உருவங்களைச் செய்கிறார்.

கேக் என்று சொன்னால் தவிர, இதை யாரும் சாப்பிடக்கூடிய பொருள் என்று நினைக்க மாட்டார்கள். அவ்வளவு நுணுக்கமான கலைப்படைப்பு. இதுவரை சீனாவில் மட்டும் சுகர் கிங் என்று அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கேக் போட்டிகளில் கலந்துகொண்டார். 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற பிறகு, உலகில் உள்ள மிக முக்கியமான கேக் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

அந்தப் போட்டியில் சீனாவை ஆண்ட முதல் பெண்ணின் உருவத்தை உருவாக்கியிருந்தார். இமை முடிகள்கூட மிகத் துல்லியமாகத் தெரியும்படி அமைக்கப்பட்ட பேரர சி யின் உருவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. “உணவுச் சிற்பங்களை உருவாக்குவது எளிதான விஷயமில்லை. சில சமயங்களில் நான் நினைக்கும் அளவுக்கான துல்லியம் கிடைக்காது. அதற்காக மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தைச் செய்துகொண்டே இருப்பேன்.

எனக்குத் திருப்தி வரும் வரை நான் செய்வதை நிறுத்தமாட்டேன். சாப்பிடக்கூடிய பொருள்தானே, இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைச் செய்யும்போது நூறு சதவீதம் சரியாகச் செய்ய வேண்டும் என்பது என் கொள்கை. இப்படி இருப்பதால்தான் என்னால் மிகச் சிறிய பூக்களிலும் சில மி.மீ. அளவுள்ள இமை முடிகளிலும் நேர்த்தியைக் கொண்டுவர முடிகிறது. நான் ரகசியம் என்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. ஆர்வமாக வருகிறவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறேன்” என்கிறார் ஸோவ் யி.

‘கேக்’கில் கலை வண்ணம் கண்டார்!

இத்தாலியில் 16 வயது மகன் ஒருவர், தன் தாய் மீது வழக்குத் தொடுத்திருந்தார். “என் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்துகொண்டவர்கள். என் அனுமதியின்றி, என் படங்கள் விவரங்களை பேஸ்புக்கில் தொடர்ந்து அம்மா பகிர்ந்து வருகிறார். பல தடவை சொல்லியும் அவர் தன் செயலை நிறுத்தவே இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். என் அப்பாவின் மிரட்டலுக்கும் ஆளாகியிருக்கிறேன்” என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார் அந்த மகன். சமீபத்தில் தீர்ப்பு வந்தது. “நாம் பெற்ற குழந்தையாக இருந்தாலும் ஓரளவு வளர்ந்த பிறகு, அவர்களின் விருப்பங்களை நாம் மதிக்க வேண்டும்.

அவர் அனுமதியின்றி படங்கள் வெளியிடுவதே தவறு. வேண்டாம் என்று சொன்ன பிறகும் தொடர்ச்சியாக அதே விஷயத்தைச் செய்வது குற்றம். பிப்ரவரி 1, 2018-க்குள் மகன் தொடர்பான அத்தனை விஷயங்களையும் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், சுமார் 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது முக்கியமான வழக்கு. மற்றவர்களுக்கும் இது ஒரு பாடம்” என்று நீதிபதி மோனிகா வெல்லெட்டி கூறியிருக்கிறார்.

ஒருவரின் விருப்பத்தை மதிக்கக் கற்றுக்கொள்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x