Published : 21 Jan 2018 08:58 AM
Last Updated : 21 Jan 2018 08:58 AM

உலக மசாலா: நேர்மையாகக் கிடைக்கும் வெற்றியே நிலைக்கும்!

அமெரிக்காவில் அல்ட்ரா மாரத்தான் போட்டிகளில் பிரபலமான வீரர் 45 வயது கெல்லி அக்நியு. 2014-ம் ஆண்டு முதல் 48 மணி நேர அல்ட்ரா மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது இவருக்கு இனி ஓடக் கூடாது என்று தடை விதித்துள்ளது அல்ட்ரா மாரத்தான் அமைப்பு. காரணம், ஓய்வெடுக்காமல் ஓட வேண்டிய இந்தப் போட்டிகளில் கெல்லி யாருக்கும் தெரியாமல் ஓய்வெடுத்திருக்கிறார்.

2015-ம் ஆண்டில் 48 மணி நேர அல்ட்ரா மாரத்தான் போட்டியில் 55 மைல்களுக்கு அதிகமான தூரத்தை அவர் எட்டியபோதே போட்டி அமைப்பாளர்களுக்குச் சந்தேகம் வந்தது. ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கும் 2-வது இடத்துக்கு வந்தவர்களுக்கும் அதிக தூர வித்தியாசம் இருந்தது. அதன்பிறகு கெல்லியைக் கண்காணிக்க முடிவெடுத்தனர். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சமீபத்தில் நடந்த போட்டியில் கழிப்பிடங்களில் கேமராக்களைப் பொருத்தினர். கழிவறைக்குச் சென்ற கெல்லி, யாருக்கும் தெரியாது என்று எண்ணி 7 நிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்தார்.

பிறகு இன்னும் உத்வேகத்தோடு ஓடி, முதலாவதாக இலக்கை அடைந்தார். போட்டி அமைப்பாளர்கள் கெல்லி ஓய்வெடுத்த விஷயத்தை அறிந்து அவரை தகுதி நீக்கம் செய்தனர். இதுவரை வாங்கிய பட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும், விளையாடத் தடை விதிப்பதாகவும் அறிவித்தனர். “ஓய்வெடுக்காமல் ஓட வேண்டும் என்பதுதான் போட்டி. கழிவறையைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு, ஓடுவதில் நியாயம் இல்லை. ஒவ்வொரு போட்டியாளரும் கடினமாக உழைக்கிறார்” என்கிறார்கள் அமைப்பாளர்கள்.

நேர்மையாகக் கிடைக்கும் வெற்றியே நிலைக்கும்!

மெரிக்காவில் ‘Tide pod challenge’ என்ற சவால் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. சோப்பு அடைக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் பைகளைக் கடித்து, சோப்பு நீரைத் துப்ப வேண்டும் என்பதுதான் சவால். இப்படி கடிக்கும்போது சோப்புத் தண்ணீர் வாய்க்குள் சென்றுவிடுகிறது. இது உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சோப்பு உள்ளே சென்றால் வாந்தி, கொப்புளம், பேதி போன்றவை ஏற்படலாம். மரணத்துக்கும் அழைத்துச் சென்றுவிடும் என்கிறார்கள். டைட் சோப்பு நிறுவனம், “நாங்கள் துணிகளைச் சுத்தம் செய்வதற்குத்தான் சோப்புகளைத் தயார் செய்கிறோம். பல லட்சக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பாக எங்கள் சோப்பு பயன்படுத்தப்பட்டுவருகிறது. குழந்தைகள் அருகில் சோப்புகளை வைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறோம். எங்கள் தயாரிப்பை இப்படிப் பயன்படுத்துவது வருத்தத்தை அளிக்கிறது” என்கிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 40 பேர் சோப்பை விழுங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முட்டாள்தனமான சவால்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x