Published : 17 Jan 2018 10:07 AM
Last Updated : 17 Jan 2018 10:07 AM

உலக மசாலா: ஐயோ... கற்பனைக்கு எட்டாத உறைபனி!

உலகின் மிகக் குளிர்ந்த பகுதியாக இருக்கிறது சைபீரியாவில் உள்ள ஒமியா கோன் கிராமம். சாதாரணமாகவே இந்தக் கிராமம் குளிர்ப் பிரதேசமாகத்தான் இருக்கும். தற்போது மைனஸ் 62 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியிருக்கிறது. வெப்பநிலையை அளவிடும் தெர்மாமீட்டரே கடுங் குளிரால் உடைந்துவிட்டது. இந்தக் கிராமத்தில் 500 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பனிமான்களை மேய்த்துக்கொண்டு நாடோடிகளாக ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். அரசாங்கத்தின் முன்முயற்சியால் 80 ஆண்டுகளாக இதே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். பேனாவில் உள்ள மை, வாகனங்களில் உள்ள பெட்ரோல் உட்பட அனைத்தும் உறைந்துவிட்டன. வீட்டை விட்டு வெளியே வந்தால் இமைகளில் கூடப் பனிப் படர்ந்துவிடுகிறது. 1933-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இப்படி ஓர் உறைபனிச் சூழலை மக்கள் சந்திக்கிறார்கள்.

ஐயோ... கற்பனைக்கு எட்டாத உறைபனி!

துருக்மெனிஸ்தான் தலைநகர் அஸ்காபாத்தில் இந்தப் புத்தாண்டிலிருந்து கறுப்பு கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நகரில் சுற்றிவரும் கறுப்பு கார்களைக் காவல் துறையினர் கைப்பற்றுகிறார்கள். காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றிவிடுவதாக ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான், கார்களைத் திரும்ப ஒப்படைக்கிறார்கள். ஜனவரி முதல் நாளில் இருந்து வாகனங்கள் நிறுத்தக்கூடிய அரசாங்க இடங்களில் உள்ள கறுப்பு கார்களை காவல் துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். இந்த விஷயம் சொந்தமாகக் கறுப்பு கார் வைத்திருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பலரும் எதிர்ப்பு காட்டியவுடன், கறுப்பு கார் தலைநகரில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் உங்கள் விருப்பம்போல் வண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று யோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டிலேயே துருக்மெனிஸ்தான் கறுப்பு கார்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துவிட்டது. அப்போது காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம், ‘வெள்ளை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்’ என்ற தகவல் பரப்பப்பட்டது. அரசாங்க அதிகாரிகளின் கார்கள் அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டன. தற்போது பொது மக்களின் கார்களையும் நிறம் மாற்றச் சொல்லி அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது. இந்த நிற மாற்றத்துக்குக் காரணம் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமேதோவ். இவர் முன்பு பல் மருத்துவராக இருந்தவர். தன்னுடைய வீடு, அலுவலகத்தை வெள்ளை மார்பிளில் மாற்றிவிட்டார். வெள்ளைக் குதிரைகளை வைத்திருக்கிறார். வெள்ளை ஆடைகளை அணிகிறார். வெள்ளைத் தரை விரிப்புகள், வெள்ளைப் பூக்கள் நிறைந்த ஜாடிகள் என்று எங்கும் எதிலும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார். “அதிபருக்கு வெள்ளை அதிர்ஷ்டம் என்றால் அவர் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். திடீரென்று காரின் நிறத்தை மாற்றச் சொன்னால் என்ன செய்வது? முதலில் எங்களுக்கு வெள்ளைப் பிடித்திருக்க வேண்டும். நிறம் மாற்றுவது மிகவும் செலவு பிடித்த விஷயம். அரசாங்கத்தின் அறிவிப்பால் வெள்ளை பெயின்ட்டை பல மடங்கு விலை ஏற்றிவிட்டனர். சாதாரணமாக காருக்கு நிறம் மாற்ற இங்கே 2.6 லட்சம் ரூபாய் செலவாகும். இப்போது 4 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். என்னுடைய மாத வருமானமே 38 ஆயிரம் ரூபாய்தான். ஆண்டு முழுவதும் சேமித்தால்கூட என்னால் பெயின்ட் அடிக்க முடியாது” என்கிறார் ஓர் அஸ்காபாத்வாசி.

தனி மனித சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடுவதெல்லாம் அநியாயம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x