Published : 14 Jan 2018 09:37 AM
Last Updated : 14 Jan 2018 09:37 AM

உலக மசாலா: பெண்கள் உடைகளுக்கு ஆண் மாடல்!

சீனாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இங்கே குறைந்த விலையில் ஆடைகளை வாங்கலாம். ஆனாலும் மக்கள் வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். விளம்பரத்தில் காட்டப்படும் படங்களுக்கும் உண்மையான துணிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் காரணம். விளம்பரத்தைப் பார்த்து வாங்கிவிட்டு, ஏமாற்றமடைகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தை நடத்திவரும் இளைஞர், மக்களின் நம்பிக்கையைப் பெற முடிவு செய்தார். மாடல்களால் அணியப்பட்ட ஆடைகளின் படங்களுக்குப் பதிலாக, தானே விதவிதமான ஆடைகளை அணிந்து படங்கள் எடுத்தார். அவற்றை இணையதளத்தில் வெளியிட்டார். 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். “ஒரு ஆண், பெண்கள் உடையை அணிவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பயமாக இருந்தது. ஆனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய கடையில் இருக்கும் உடைகளையே அணிந்து படங்கள் எடுத்ததால், அதே உடைகளே அவர்கள் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தார்கள். ஒல்லியாக இருப்பதால் நானே ஒரு மாடலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘டிஸ்னி பிரின்சஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். எனக்கும் வியாபாரம் பெருகிவிட்டது. வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்த பணத்துக்கு அவர்கள் விரும்பிய ஆடைகளைப் பெற முடிந்தது” என்கிறார் அலி எக்ஸ்பிரஸ் உரிமையாளர்.

பெண்கள் உடைகளுக்கு ஆண் மாடல்!

டோ

க்கியோவின் ஜின்போகோ பகுதியில் உள்ள ‘ஓபன் சோர்ஸ்’ உணவகம் மிராய் ஷோகுடு. இந்த உணவகத்தை 33 வயது சேகாய் கோபயாஷி என்ற பொறியாளர் நடத்தி வருகிறார். பணம் இல்லாவிட்டாலும் இந்த உணவகத்தில் 50 நிமிடங்கள் வேலை செய்துவிட்டு, ஒரு வேளை உணவைச் சாப்பிட்டுச் செல்லலாம். இங்கே நிரந்தரமான ஊழியர்கள் கிடையாது. ஒரே நேரத்தில் 12 பேர் வரை சாப்பிடக்கூடிய சிறிய உணவகம்தான். வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுப்பது, மேஜைகளைத் துடைப்பது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, உணவுகளைப் பரிமாறுவது என்று வேலைகள் இருக்கும். அவரவருக்கு என்ன வேலை பிடிக்கிறதோ, அதை 50 நிமிடங்கள் செய்ய வேண்டும். பிறகு விருப்பமான உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இங்கே உணவுக்காக வேலை செய்து வருகிறார்கள். “நான் படிப்பை முடித்துவிட்டு, ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே சமையலறை இருக்கும். ஊழியர்கள் தாங்களே சமைத்துச் சாப்பிடலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். நான் சமைத்த உணவுகள் என் நண்பர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டன. எனக்குச் சமையலில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. உணவகம் ஆரம்பிப்பதற்கான முறையான பயிற்சி எடுத்துக்கொண்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். அப்போதுதான் எங்கள் அலுவலகத்தில் பின்பற்றிய ஓபன் சோர்ஸ் முறையை இங்கே அமல்படுத்தினேன். இதன் மூலம் கஷ்டப்படுபவர்களின் பசியையும் போக்க முடியும். அதே நேரம் அவர்களுக்கும் தங்கள் உழைப்பால் கிடைத்த உணவு என்பதில் திருப்தி கிடைக்கும். பலரும் இது சரி வராது என்றார்கள். ஆனால் இந்த ஓபன் சோர்ஸ் முறையை நான் வெற்றிகரமாகச் செய்துவருகிறேன்” என்கிறார் சேகாய் கோபயாஷி.

பசி போக்கும் ‘ஓபன் சோர்ஸ்’ உணவகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x