Published : 13 Jan 2018 10:46 AM
Last Updated : 13 Jan 2018 10:46 AM

உலக மசாலா: இவ்வளவு அப்பாவியாகவா இருப்பது!

சீனாவின் ஜெஜியாங் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது வாங் க்வி, கடந்த ஓராண்டாக ஒரு பெண்ணை ஆண் என்று நம்பி வாழ்ந்து வந்திருக்கிறார்! ஒரு குழந்தையுடன் விவாகரத்துப் பெற்றுத் தனியாக வசித்துவந்த வாங்குக்கு, 2016-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் க்யான் அறிமுகமானார். இருவரும் வெகு விரைவில் தனிப்பட்ட விஷயங்களைப் பகிரும் அளவுக்கு நண்பர்களானார்கள். நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. க்யான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் தன்னை விட வயதில் மிகவும் இளையவரும் வசீகரமானவருமான க்யானைத் திருமணம் செய்துகொள்வதில் அவருக்குத் தயக்கம் இருந்தது. அதைப் புரிந்துகொண்ட க்யான், அன்பும் காதலும்தான் முக்கியம், வயது முக்கியமில்லை என்றெல்லாம் பேசி, சம்மதத்தைப் பெற்றார்.

இருவரும் நெருங்கிப் பழகினார்கள். சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெற்றோரை அறிமுகம் செய்து வைத்தார் க்யான். மாமனார், மாமியாரை எல்லாம் பார்த்து மகிழ்ந்து போனார் வாங். திரும்பி வந்த பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். திருமணம் செய்த பிறகே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் க்யான். 6 மாதங்களில் சுமார் 30 லட்சம் ரூபாயை க்யானுக்காகக் கொடுத்திருந்தார் வாங். திடீரென்று ஒருநாள் வெளியில் சென்ற க்யான், திரும்பி வரவேயில்லை. மொபைல் போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. முதலில் தன்னை விட்டு, வேறு ஒரு பெண்ணிடம் க்யான் சென்றுவிட்டதாக நினைத்தார். பிறகு தான் தன்னிடம் 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்தார். ஏமாற்றிய க்யானைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அந்த விசாரணையில்தான் க்யான், ஆண் அல்ல ஒரு பெண் என்பது தெரியவந்தது. பணத்தை ஏமாற்றியதைவிட, ஒரு பெண்ணை ஆண் என்று நினைத்து வாழ்ந்த ஏமாற்றம் அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது. க்யானின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். “க்யானுக்கு சின்ன வயதிலிருந்தே ஆண் உடை மீதுதான் ஆர்வமாம். நடை, உடை, பாவனைகளை ஆணாகவே அடிக்கடி மாற்றிக்கொள்வாராம். மற்றபடி க்யான் என்னை ஏமாற்றி, பணம் பறித்தாள் என்பதை அவளின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் இருக்கும் இடம் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறிவிட்டனர். ஒரு பெண்ணை எப்படி ஆண் என்று நம்பினாய் என்று கேட்கிறார்கள்.

க்யான் வெளியில் செல்லும்போது ஒருநாளும் பெண்கள் கழிவறைக்குச் சென்றதில்லை. ஆணுக்கு உரிய உடல் வாகு. ஒரு ஆண் எப்படிக் காதலை வெளிப்படுத்துவாரோ அதேபோல நடந்துகொண்டாள். ஒரு பெண்ணாக இருந்தும் என்னை எவ்வளவு சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திட்டமிட்டு, தனியாக வசிக்கும் பெண்ணாகப் பார்த்து ஏமாற்றும் இவள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என் பணத்தை வாங்கப் போகிறேன். என்னைப் போல் இனி யாரையும் அவள் ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் வெளியுலகில் பகிர்ந்துகொண்டேன்” என்கிறார் வாங்.

இவ்வளவு அப்பாவியாகவா இருப்பது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x