Published : 13 Jan 2018 10:44 AM
Last Updated : 13 Jan 2018 10:44 AM

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.288 கோடி நிதியுதவி: இலங்கைக்கு இந்தியா வழங்கியது

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா ரூ.288 கோடி நிதியுதவியை இலங்கைக்கு வழங்கி யுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையின் நிதி மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வளர்ச்சி வங்கி கடந்த 10-ம் தேதி கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுக மையமாக மாற்ற இலங்கை முயற்சிக்கிறது. அதற்கான நிதியைப் பெற தற்போது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தில் ஏற்றுமதி-இறக்குமதி இந்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் டேவிட் ரஸ்குயினாவும், இலங்கை கருவூலத்துறை செயலர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்காவும் கையெழுத்திட்டனர்.

இந்த மேம்படுத்தும் திட்டத்தில் காங்கேசன்துறை துறைமுகமானது ஒரு முழுமையான வர்த்தக துறைமுகமாக மாற்றப்படும். மேலும் இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள சிறிய துறைமுகங்களைச் சீரமைக்கும் பணியிலும் இந்த வங்கி ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் மானிய உதவி மூலம் காங்கேசன்துறை துறைமுக மேம்பாட்டுப் பணிகளில் 4 கட்டங்கள் முடிந்துள்ளன. தற்போது அளிக்கப்பட்டுள்ள நிதியானது அடுத்த 2 கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கானது. சரக்குக் கப்பல்களை கையாளுதல், துறைமுகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்படும். இலங்கையை வளர்ச்சியான நாடாக மாற்றுவதற்கு இந்தியா அளித்த உறுதியின் கீழ் இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன், இலங்கை ராணுவம் நடத்திய உள்நாட்டுப் போரில் காங்கேசன்துறை துறைமுகமானது மோச மாக சேதமடைந்தது. யாழ்ப்பாணப் பகுதியில் இது முக்கியமான துறைமுகமாக அமைந்துள்ளதால் இதை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x