Published : 10 Jan 2018 09:22 AM
Last Updated : 10 Jan 2018 09:22 AM

உலக மசாலா: ஒரே நேரத்தில் 3 திருமணங்கள்

ஒரே நேரத்தில் 3 திருமணங்கள்

உகாண்டாவைச் சேர்ந்த 50 வயது முகமது ஸெமன்டா, ஒரே நேரத்தில் 3 திருமணங்களைச் செய்து, ஆப்பிரிக்கா முழுவதும் பிரபலமாகிவிட்டார்! உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இவர். 48 வயது சல்மாத் நலுவுக், 27 வயது ஜாமியோ நகாயிஸா, 24 வயது மஸ்டுல்லா நாம்வான்ஜே என்ற மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துவிட்டார். மூவரும் வெள்ளை ஆடையில் கிரீடம் சூட்டிக்கொண்டு முகமதுவை இன்முகத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். “தனித் தனியாகத் திருமணம் செய்வதற்கு என்னிடம் வசதி இல்லை. அத்துடன் இந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததை நினைத்துச் சிறிதும் வருந்தவில்லை. திருமணம் ஒன்றாக நடைபெற்றாலும் மூவரும் தனித் தனி வீடுகளில்தான் வசிக்கப் போகிறார்கள். நான் இன்னும் கடினமாக வேலை செய்து, மூன்று மனைவிகளையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வேன். நான் யாரையும் ஏமாற்றி, திருமணம் செய்துகொள்ளவில்லை. 48 வயது சல்மாத் என்னுடைய முதல் மனைவிதான். 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து, 5 குழந்தைகளும் எங்களுக்கு இருக்கிறார்கள். ஜாமியோ, மஸ்டுல்லா இருவரும் சல்மாத்தின் தங்கைகள். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை சரியாக இல்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் திருமணம் செய்துகொண்டு, காப்பாற்ற முடிவெடுத்தேன். இதில் அந்தப் பெண்களுக்கும் முழுச் சம்மதம். என் மனைவிக்கும் சம்மதம். இருவரைத் திருமணம் செய்யும்போது, என் மனைவிக்குப் பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். மூவரும் சகோதரிகள் என்பதால் இங்கே போட்டி, பொறாமைக்கு வழியே இல்லை” என்கிறார் முகமது.

என்னத்தைச் சொல்றது?

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில் திமிங்கில ஆராய்ச்சியாளர் நன் ஹாசர், தன் குழுவினருடன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மிக மிகப் பிரம்மாண்டமான, சுமார் 22 ஆயிரம் கிலோ எடையுடைய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று வந்தது. அதன் அருகே சென்று, திமிங்கிலத்தைத் தட்டிக் கொடுத்தார். பிறகு அவரும் அவருடைய குழுவினரும் திமிங்கிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து படம் பிடித்தார்கள். “நாங்கள் அனைவரும் திமிங்கிலம் மீதே கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். அப்போது மிகப் பெரிய புலிச்சுறா ஒன்று எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த திமிங்கிலம், சுறாவைத் தன் தலையாலும் துடுப்பாலும் வாலாலும் விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது. திமிங்கிலம், மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களைப் பாதுகாக்கிறது என்ற உண்மையை இப்போது படம் பிடித்து, நிரூபித்துவிட்டோம். கடந்த 28 ஆண்டுகளாகத் திமிங்கிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு திமிங்கிலத்தால் நான் காப்பாற்றப்பட்ட இந்தத் தருணம் என் வாழ்க்கையில் மிகவும் அற்புதமானது!” என்கிறார் 68 வயது நன் ஹாசர்.

ஆபத்தில் உதவி செய்யும் அற்புதமான திமிங்கிலங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x