Published : 09 Jan 2018 09:31 AM
Last Updated : 09 Jan 2018 09:31 AM

உலக மசாலா: தானும் செய்யாது, அடுத்தவர்களையும் செய்ய விடாது!

மெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கிறார் க்ரெக் ஷில்லெர். இந்த ஆண்டு மிகக் கடுமையான குளிர்காலம். பாதுகாப்பான வீட்டைத் தவிர, வெளியில் வசிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வீடற்ற மக்களுக்கு இதுபோன்று வசிக்க முடியாத சூழல் ஏற்படும்போது, அரசாங்கம் தற்காலிகக் காப்பகங்கள் அமைத்து, தங்குவதற்கு ஏற்பாடு செய்யும். ஆனால் இந்த ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் வீடற்ற மனிதர்களுக்கு எந்த ஏற்பாடும் அரசாங்கத்திலிருந்து செய்யவில்லை. அதனால் தன்னுடைய வீட்டின் கீழ்த் தளத்தில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத பெரிய அறையில் வீடற்ற மக்களைத் தங்க வைத்தார். அவர்களுக்குச் சூடான பானங்களை வழங்கினார். உணவளித்தார். தூக்கம் வராதவர்களுக்குப் பொழுது போக்குவதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டியையும் வைத்தார். குளிரைத் தாங்குவதற்கு கட்டில்கள், கம்பளிகள், போர்வைகள் போன்றவற்றை வழங்கினார். மாலையிலிருந்து மறுநாள் காலை வரை இங்கே வீடற்றவர்கள் தங்கிக்கொள்ளலாம். அரசாங்கம் தங்களைக் கைவிட்டாலும் க்ரெக் தனி மனிதராக இவ்வளவு தூரம் உதவுவதை எண்ணி அந்த ஏழை மக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

“தாங்க முடியாத குளிர்காலம். வீட்டுக்குள் இருப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது. வீடற்ற மனிதர்கள் குளிரில் வாடுவதைச் சகிக்க முடியாமல்தான், நான் இந்த ஏற்பாட்டைச் செய்தேன். இந்த ஆண்டு அரசாங்க மையங்கள் ஏனோ திறக்கவில்லை. உரிமம் பெற்ற தனியார் மையங்களும் திறக்கவில்லை. அந்த மக்கள் என்ன செய்வார்கள்? பகலில் சூரிய வெளிச்சம் வந்தவுடன் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் வேலைகளை முடித்துக்கொண்டு, மாலையில் இங்கே வருவார்கள். இது தற்காலிகம்தான். பருவநிலை சரியானால் இங்கே யாரும் வரப் போவதில்லை. நான் இந்தப் பணியை நீண்ட காலம் செய்யப் போவதுமில்லை. அதற்குள் அரசாங்கத்திலிருந்து இதை உடனடியாக மூடும்படி உத்தரவு வந்திருக்கிறது. 2016-ம் ஆண்டும் இதுபோன்ற சூழ்நிலையில் என் கார் நிறுத்தும் இடத்தைப் பயன்படுத்தினேன். அப்போதும் அரசாங்க அதிகாரிகள் மூடச் சொன்னார்கள். ஆனால் இந்த ஆண்டு நிலைமை ரொம்ப மோசம். இப்போதும் அப்படிச் சொன்னால் என்ன செய்வது?” என்கிறார் க்ரெக்.

“உரிமம் இல்லை. தரைத்தளம் முழுமையாகக் கட்டப்படவில்லை. உயரம் குறைவாக இருக்கிறது. போதுமான ஜன்னல்கள் இல்லை. தரைத் தளத்தில் தூங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதையெல்லாம் க்ரெக் கடைப்பிடிக்கவில்லை. இது அவ்வளவு பாதுகாப்பான இடம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அதனால் சட்டப்படி இவருடைய மையத்தை நடத்த அனுமதிக்க இயலாது. உடனடியாக அனைத்து விஷயங்களையும் செய்து, உரிமம் பெற்றால் மட்டுமே தொடர்ந்து மையத்தை நடத்த இயலும்” என்கிறார் அரசாங்க அதிகாரி கோபி பாஷம்.

“இந்தக் குளிரில் யாராக இருந்தாலும் உறைந்துபோய் விடுவார்கள். உயிர்களைக் காப்பாற்றுவது முக்கியமா, இல்லை சட்டம் முக்கியமா? அரசாங்கம் போல என்னால் வீடற்ற மக்களை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது. வேறு வழிகளில் முயற்சி செய்யப் போகிறேன்” என்கிறார் க்ரெக் ஷில்லர்.

தானும் செய்யாது, அடுத்தவர்களையும் செய்ய விடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x