Published : 07 Jan 2018 10:39 AM
Last Updated : 07 Jan 2018 10:39 AM

உலக மசாலா: விநோத வழக்கு!

தைவானைச் சேர்ந்த இரு பல் மருத்துவர்கள், தங்கள் தாய்க்கு 6 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. லுவோ என்ற தாய், கணவரிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர், தனியாக இரண்டு மகன்களை வளர்த்தார். ஒரு கட்டத்தில் தன்னுடைய தியாகத்தை மகன்கள் மறந்து, முதுமையில் கைவிட்டு விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார். இரு மகன்களும் பல் மருத்துவம் சேர்ந்தபோது, பிற்காலத்தில் பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 60% தனக்கு அளிக்க வேண்டும் என்று ஓர் ஒப்பந்தத்தைத் தயார் செய்து கொடுத்தார். தங்களைத் தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கும் படிக்க வைத்து, மருத்துவமனை அமைத்துக் கொடுப்பதற்கும் அம்மா கேட்கும் 10.5 கோடி ரூபாயைத் தர மகன்களும் சம்மதித்தனர். ஆனால் படிப்பு முடித்து, மருத்துவமனையிலிருந்து லாபம் வர ஆரம்பித்தபோது ஒப்பந்தப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. பெரிய மகன் மிகவும் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்து, அம்மாவைச் சரிகட்ட நினைத்தார். இரண்டாவது மகன் எதையும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். எவ்வளவோ மகன்களிடம் பேசிப் பார்த்தார். சண்டையிட்டுப் பார்த்தார். பலன் இல்லை. தான் தன் மகன்களாலேயே ஏமாற்றப்பட்டோம் என்பதை லுவோவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நீதிமன்றம் சென்றார்.

“ஒரு தாய் குழந்தைகளை வளர்ப்பது இயல்பானது. இதெற்கெல்லாம் யாராவது கணக்குப் பார்க்க முடியுமா? எந்தத் தாயும் செய்யாத காரியத்தைச் செய்தார் எங்கள் அம்மா. அப்போது எனக்கு 20 வயது என்பதால், விவரம் தெரியாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். அம்மாவிடம் மகன் போட்ட ஒப்பந்தம் எல்லாம் எப்படிச் செல்லுபடியாகும்? இப்படி எங்களிடம் பணம் கேட்டதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் எந்தவிதத்தில் நியாயம்? வயதான காலத்தில் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ வேண்டியதுதானே? இவ்வளவு பணத்தை என்ன செய்யப் போகிறார்?” என்றார் ச்சூ.

“என் மகன்கள் இருவரும் என்னை மதித்து, ஒப்பந்தப்படி பணம் தந்திருந்தார்கள் என்றால் நானே அதை மறுத்திருப்பேன். அவர்கள் என்னை மதிக்கவில்லை. என்னுடைய தியாகத்தைப் புரிந்துகொள்ளவில்லை. என்னை ஏமாற்றப் பார்த்தார்கள். இதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாயை ஏமாற்றுவது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க வேண்டாமா? அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்” என்றார் லுவோ.

இந்த அசாதாரணமான வழக்கு தைவானில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இரு தரப்பினரிடமும் பேசி, சமரசத்துக்குக் கொண்டு வந்தது நீதிமன்றம். ஒப்பந்தப்படி 10.5 கோடிக்குப் பதிலாக 6 கோடி ரூபாயை இருவரும் லுவோவுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ‘ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளிடம் இவ்வளவு தூரம் நடந்துகொள்ள வேண்டியதில்லை. பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்?’ என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள். ‘பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம். இன்னும் கூட லுவோவுக்குப் பணம் கொடுத்திருக்கலாம்’ என் கிறார்கள் இன்னொரு தரப்பினர்.

விநோத வழக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x