Published : 06 Jan 2018 10:25 AM
Last Updated : 06 Jan 2018 10:25 AM

உலக மசாலா: ‘சே, என்ன வாழ்க்கை’ என்று தோன்றும்போது ஜாக்குலினை நினைத்துக்கொள்ளலாம்!

மெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கிறார் 16 வயது ஜாக்குலின் ரோட்ரிகஸ். பிறந்ததிலிருந்தே ஏற்பட்ட அரிய நிணநீர்ச் சுரப்பி குறைபாட்டால் மிகப் பெரிய கட்டி வாயில் உருவாகியிருக்கிறது. இவரால் பேச முடியாது. எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது. முதல் பிறந்தநாள் வரை ஜாக்குலின் இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இன்று பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்குள் நுழைய இருக்கிறார். இதற்குக் காரணம் தன் குடும்பமும் நண்பர்களும்தான் என்கிறார் ஜாக்குலின். ஐபாட் மூலமே எதையும் எழுதிக் காட்டி, தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். குழாய் மூலமே சிறப்பு உணவுகள் அளிக்கப்படுகின்றன.

“மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாலும் என் பெற்றோருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. என்னை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் வளர்த்தார்கள். நானும் எல்லோரையும் போல் சாதாரணமானவள் என்ற எண்ணத்தை விதைத்தார்கள். என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். அதனால்தான் நான் பள்ளி சென்று படிக்க முடிந்தது. பள்ளியிலும் மிக அற்புதமான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். என்னை ஒருபோதும் சோர்வடைய விட மாட்டார்கள். வாயைத் திறந்தால் கட்டி வெளியே வந்துவிடும். நானும் எத்தனையோ கிண்டல்களையும் வெறுப்பையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவற்றைக் கண்டு ஒருநாளும் வருத்தப்பட்டதே இல்லை. என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் அன்பைக் கொட்டும்போது, நான் ஏன் யாரோ சிலருக்காக வருத்தப்பட வேண்டும்? நன்றாகப் படிப்பேன். ஓய்வு நேரத்தில் டென்னிஸ் விளையாடுவேன். கிடார் வாசிப்பேன். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் செவிலியர் படிப்பு படிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் அதிகமாகச் சென்ற இடம் மருத்துவமனைதான். அங்கே செவிலியர்கள் மிகவும் அக்கறை யாக என்னைக் கவனிப்பார்கள். நான் மகிழ்ச்சியாக உணர்வேன். அதேபோன்ற மகிழ்ச்சியை நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செவிலியராக விரும்புகிறேன்” என்கிறார் ஜாக்குலின்.

“ஜாக்குலின் மாதிரி ஒரு குழந்தை பிறந்ததை எண்ணி நாங்கள் இதுவரை வருத்தப்பட்டதே இல்லை. அவளையும் வருத்தப்பட வைத்ததில்லை. இந்தப் பதினாறு ஆண்டுகளில் எவ்வளவு கஷ்டத்தையும் தடைகளையும் தாண்டி வந்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. என் வாழ்நாளில் ஜாக்குலின் போன்ற ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்ததில்லை. எதைச் செய்தாலும் திருத்தமாகச் செய்வாள். அவளுக்கும் வாழ வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எங்களுக்கும் நீண்ட காலம் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதுதான் அவளின் வாழ்நாளை நீட்டித்திருக்கிறது என்று நம்புகிறேன். வாய்க்குள் இருக்கும் கட்டி மிகப் பெரிதாக வளரும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எத்தனை தடவை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் கட்டி வளர்ந்துகொண்டே இருக்கும். இந்த நோய்க்கு மருத்துவம் இதுவரை கிடையாது” என்கிறார் ஜாக்குலினின் அப்பா பால்.

‘சே, என்ன வாழ்க்கை’ என்று தோன்றும்போது ஜாக்குலினை நினைத்துக்கொள்ளலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x