Published : 04 Jan 2018 10:24 AM
Last Updated : 04 Jan 2018 10:24 AM

உலக மசாலா : ஐயோ... பயமாக இருக்கிறது!

அயர்லாந்தைச் சேர்ந்த 40 வயது ஆலன் ஹாவ், தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கொடூரமான மரணங்களுக்கு காரணம் தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். தன் மகள், பேரக்குழந்தைகளின் மரணங்களுக்குக் காரணம் தெரிய வேண்டும் என்று வழக்கு தொடுத்தார் க்லோடாக்கின் அம்மா. ஆலன் ஹாவ் பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர். இவரது மனைவி க்லோடாக் பள்ளி ஆசிரியர். ஆலன் எப்போதும் அமைதியாக இருப்பார். மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் அவர் தொந்தரவு கொடுத்ததில்லை. அவருக்கு ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆர்வம் மட்டும் இருந்தது. பள்ளியில் கூட தன்னுடைய லேப்டாப்பில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த விஷயம் க்லோடாக்குக்கு எப்படியோ தெரிந்து, ஆலனிடம் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆலன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

‘‘ஆசிரியராக இருந்துகொண்டு பள்ளியில் இப்படிச் செய்வது ஆலனுக்கும் தவறாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவரால் அந்தப் பழக்கத்தை விடமுடியவில்லை. ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரைப் பார்த்து, 3 மாதங்கள் சிகிச்சையும் எடுத்திருக்கிறார். அப்போதுதான் மனைவிக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. இதனால் தன்னுடைய மதிப்பு குறைந்துவிட்டதாகக் கருதியிருக்கிறார். அந்த நினைப்பு அவரைக் கூடுதல் மன அழுத்தத்துக்குத் தள்ளிவிட்டது. ஒருநாள் வீட்டு வாசலில், ‘அழைப்பு மணியை அழுத்தாதீர்கள், காவலர்களுக்குத் தகவல் கொடுங்கள்’ என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். பிறகு தன் பெற்றோர், சகோதரர்கள், மனைவியின் பெற்றோர், அவரது சகோதரிகளுக்குத் தனித்தனியாகக் கடிதங்களை எழுதினார்.

அதில், ‘என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று எழுதியிருந்தார். பிறகு குழந்தைகளையும் மனைவியையும் கத்தியால் கொலை செய்தார். தன் தற்கொலைக்கான ஒரு நீண்ட கடிதமும் எழுதினார். ஆனால் கொலை செய்ததை விட தற்கொலை செய்வதற்கு அதிகம் சிரமப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல்களை எல்லாம் அவர் எழுதிய கடிதங்கள், அவருடைய லேப்டாப், பணிபுரிந்த இடம், நண்பர்கள், மனநல மருத்துவர் போன்றவர்களிடம் விசாரித்து, அறிந்துகொண்டோம். இது மன அழுத்தத்தால் ஏற்பட்ட கொடூரம். ஆலன் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்பதை அவர் எந்தவிதத்திலும் வெளிப்படுத்தவே இல்லை. இதனால் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எந்தவிதத்திலும் அசாதாரணமாகக் காட்டிக்கொள்ளாமலேயே கொலை செய்யக்கூடிய அளவுக்கு மன அழுத்தம் இருக்கும் என்பது கவனிக்க வேண்டியது” என்கிறார் மனநல மருத்துவத் துறையின் இயக்குநரான பேராசிரியர் ஹாரி கென்னடி.

தீவிர மன அழுத்தத்தில் இருந்த ஒருவர் நான்கு பேரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் என்று வழக்கு முடிக்கப்பட்டிருக்கிறது.

ஐயோ… பயமாக இருக்கிறது..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x