Published : 02 Jan 2018 10:57 AM
Last Updated : 02 Jan 2018 10:57 AM

உலக மசாலா: இறுதிவரை உறுதியான போராட்டம்…

இறுதிவரை உறுதியான போராட்டம்…

அமெரிக்காவைச் சேர்ந்த ஹீதர் மோஷர், மகிழ்ச்சியாகத் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே மரணத்தைச் சந்தித்துவிட்டார். ஹீதரும் டேவிட்டும் நடன வகுப்பில் சந்தித்துக் கொண்டார்கள். 2016-ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று, ஹீதருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று இரவு குதிரைப் பூட்டிய ஒரு வண்டியில் ஹீதரின் வீட்டு வாசலுக்கு வந்தார் டேவிட். தெரு விளக்கில் தன்னுடைய திருமணக் கோரிக்கையை வைத்தார். மார்பகப் புற்றுநோய் என்பதால், தன்னால் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் ஹீதர். ஆனால் மார்பகப் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது, ஒருவேளை அறுவை சிகிச்சை செய்தால் கூட பிழைத்துவிட முடியும் என்பதால் தன் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்படியும் இருவரும் சேர்ந்து புற்றுநோயை எதிர்த்துப் போராடலாம் என்றும் கூறினார் டேவிட். ஹீதரும் குணமாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். ஐந்தே நாட்களில், மிக மோசமான மார்பகப் புற்றுநோய் என்பது தெரியவந்தது. “அந்த நாள் மிகவும் வலியாக இருந்தது. சிறந்த மருத்துவர்களைத் தேடி அலைந்தோம். கடந்த செப்டம்பர் மாதம் புற்றுநோய் மூளைவரை பரவிவிட்டது. இரண்டே மாதங்களில் உயிர்காக்கும் கருவிகள் மூலமே பிழைத்திருக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் கொஞ்சம் கூட பயமோ, அவநம்பிக்கையோ அவரிடம் இல்லை. எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே இருப்பார். திடீரென்று நிலைமை இன்னும் மோசமானது. உடனே ஹீதர் திருமணம் செய்துகொள்ளலாம் என்றார். டிசம்பர் 30 அன்று திருமணம் செய்யத் தீர்மானித்தோம். ஆனால் மருத்துவர்கள் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர். டிசம்பர் 22 அன்று, பிரான்சிஸ் தேவாலயத்தில் எங்கள் திருமணம். இருவரும் திருமண உடைகளை அணிந்திருந்தோம். மருத்துவர்களின் உதவியோடு படுக்கையில் இருந்தபடியே தேவாலயம் வந்தார். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்த, இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். திருமண உறுதிமொழியைச் சொன்னவுடன் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்போல இரண்டு கைகளையும் உற்சாகமாகத் தூக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டோம். மறுநாள் ஹீதர் மறைந்தார். முதல் நாள் திருமணம் நடந்த அதே தேவாலயத்தில் மறுநாள் இறுதிச் சடங்கைச் செய்தபோது உடைந்துபோனேன்” என்கிறார் டேவிட்.

கண்களைக் கவரும் காகித உடை!

பரிசுப் பெட்டிகளை அலங்கரிக்கும் காகிதங்களைப் பெரும்பாலும் குப்பைத் தொட்டியில் போடுவதுதான் வழக்கம். ஆனால் வட கரோலினாவைச் சேர்ந்த 26 வயது ஒலிவியா மியர்ஸ், காகிதங்களில் அழகான ஆடைகளை உருவாக்கிவிடுகிறார்! “2015-ம் ஆண்டு டாகோ பெல் என்பவரின் காகித உடைகள் எல்லோரையும் கவர்ந்தன. அவருக்கு முன்பே நான் இந்தப் பரிசுக் காகிதங்களை வைத்து ஓர் உடையை உருவாக்கினேன். பசை, டேப் வைத்து உருவாக்கப்பட்ட இந்த உடை எளிதில் கிழிந்துவிட்டது. அதனால் அடுத்த ஆண்டு காகிதங்களைத் தைத்துவிட்டேன். என்னைத் தவிர யாருமே இது காகித உடை என்று நினைக்கவில்லை. ஏராளமான உடைகளை உருவாக்கினேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகாக அமைந்தது. இப்போது பலரும் என்னிடம் காகித உடைகளை விரும்பிக் கேட்கிறார்கள்” என்கிறார் ஒலிவியா.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x