Published : 20 Dec 2017 10:22 AM
Last Updated : 20 Dec 2017 10:22 AM

ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது.

கடந்த 1948-ல் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான் சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மை யில் அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், அமெரிக்கா வின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எகிப்து சார்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

“அமெரிக்காவின் முடிவு சர்வ தேச சட்ட விதிகளுக்கு எதிரானது, இந்த முடிவை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரத்து செய்தது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியபோது, “ஜெருசலேம் விவகாரத்தில் நன்மைக்குப் பதிலாக ஐ.நா. தீங்கு விளைவிக்கிறது. இஸ்ரேலில் எங்கு தூதரகம் அமைப்பது என்பது அமெரிக்காவின் தனிப்பட்ட விருப்பம். எங்கள் நாட்டின் இறையாண்மையை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமெரிக்காவின் முடிவு குறித்து பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜெருசலேம் விவகாரத்தில் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதால் அவரது பயணம் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x