Published : 17 Dec 2017 11:45 AM
Last Updated : 17 Dec 2017 11:45 AM

உலக மசாலா: பேரன்புக்காரி!

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆந்தையால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்ட அணிலை, அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள க்ரீன்வில்லி கவுண்ட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பம் காப்பாற்றியது.

இன்றுவரை அந்த வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது அணில். “2009-ம் ஆண்டு பிறந்து 4 வாரங்களே ஆன சிறிய அணிலை, ஒரு ஆந்தை மோசமாகத் தாக்கியது. அது பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம். நல்லவேளையாக வனவிலங்குகள் மீட்புக் குழுவினர் வந்து, இந்த அணிலுக்கு மருத்துவம் செய்தனர். அணில் பிழைத்துக்கொண்டது. மிகச் சிறிய அணிலாக இருந்ததால், சிறிது காலம் பராமரித்து, பிறகு காட்டில் விட்டுவிடும்படிச் சொன்னார்கள். நாங்களும் மகிழ்ச்சியோடு அணிலை அழைத்துவந்தோம். ஏனென்றால் நாங்கள் ஏற்கெனவே இதுபோன்று பாதிக்கப்பட்ட அணில்களுக்கு அடைக்கலம் அளித்து, காட்டில் விட்டிருக்கிறோம். ஆனால் இந்த பெல்லா மட்டும் வித்தியாசமானவள். ஓரளவு வளர்ந்த பிறகு இன்னும் சில அணில்களுடன் சேர்த்து, காட்டில் விட்டோம். எல்லா அணில்களுமே சில நாட்களுக்கு எங்கள் வீட்டுக்குத் தினமும் வந்துகொண்டிருந்தன. காலப்போக்கில் காட்டுடன் இணக்கமான பிறகு வருவதை நிறுத்திவிட்டன. ஆனால் இந்த பெல்லா மட்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகும் வந்துகொண்டிருக்கிறாள். இவளுக்காக நாங்கள் சிறப்புக் கவனம் எல்லாம் கொடுக்கவில்லை. ஆனால் எங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.

தினமும் காலை கதவுக்கு முன்னால் வந்து காத்திருப்பாள். சற்று நேரம் அவளை யாரும் கவனிக்கவில்லை என்றால், உணவு அறையின் ஜன்னலில் ஏறி, கண்ணாடி வழியே பார்ப்பாள். யாராவது பார்த்துவிட்டால், கதவைத் திறந்து விடுவோம். வீடு முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, அமர்வாள். அவளுக்குப் பிடித்த பருப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கி வைத்திருப்போம். எங்கள் மடி மீது அல்லது தோள் மீது அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுவாள். என் கணவர் ஜான்தான் தினமும் இவளுக்குப் பழங்களும் பருப்புகளும் வாங்கிவருவார். உணவு மேஜையில் இவளது உணவு இல்லை என்றால், உடனே ஜானின் அறைக் கதவைத் தட்டுவாள். சாப்பிட்டு முடித்தவுடன் எங்கள் வீட்டுக் குழந்தைகள், நாய்களுடன் விளையாடுவாள். பிறகு காட்டுக்குச் சென்றுவிடுவாள். சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்லா தாயானாள். இனி வர மாட்டாள் என்று நினைத்தோம். குட்டிகளை ஈன்ற சில வாரங்களில் தன் 4 குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்த நாளை எங்களால் மறக்க முடியாது. மனிதக் குடும்பமும் அணில் குடும்பமும் சந்தித்துக்கொண்ட அற்புதமான தருணம் அது! சென்ற ஆண்டு காலில் அடிபட்டதோடு வீட்டுக்கு வந்தாள். அவளை வீட்டில் வைத்து சிகிச்சையளித்தோம். அப்போது மீண்டும் 3 குட்டிகள் போட்டாள்.

குட்டிகளையும் கவனித்து, சில வாரங்களுக்குப் பிறகு காட்டுக்கு அனுப்பி வைத்தோம். அணில்களைப் பற்றிய பல கற்பிதங்களை பெல்லா உடைத்திருக்கிறாள். உண்மையில் அணில்கள் அற்புதமான பிராணிகள் என்று எங்கள் நண்பர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறாள். எல்லா ஜீவன்களுக்கும் இரக்கம் என்பது முக்கியமானது என்ற பாடத்தை பெல்லா கற்றுக் கொடுத்திருக்கிறாள். இன்று சமூகவலைதளங்களிலும் பெல்லாவின் புகழ் பரவிவிட்டது” என்கிறார் பிரான்ட்லி ஹாரிசன்.

பேரன்புக்காரி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x